தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அவர் கொண்டு வந்த பல முக்கிய திட்டங்களில் ஒன்று ‘நான் முதல்வன் திட்டம்’. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி “நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம்” என்ற பெயரில் முதலமைச்சர் தொடங்கி வைத்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், இதுவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அதன்படி நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து மாணவர்கள் திறன் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
டெல்லியில் நடந்த ‘இந்தியா ஸ்கில்ஸ் 2024’ போட்டி
அந்த வகையில், ‘இந்தியா ஸ்கில்ஸ் 2024’ ( India Skills 2024 ) என்கிற நாட்டின் மிகப்பெரிய திறன் போட்டி டெல்லி துவாரகாவில் உள்ள யஷோபூமியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகம் சார்பில் நடைபெற்றது. மே 15 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள், தொடா்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. இதில், இந்திய முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து கலந்துகொண்டவர்களுக்கிடையே 50 க்கும் மேற்ப்பட்ட துறைகளில், நவீன தொழில்நுட்பம் சார்ந்து திறன் போட்டிகள் நடைபெற்றது.
மொபைல் ரோபோடிக்ஸ், பேஷன் டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் போட்டிகள் தேசிய அளவில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், மொபைல் ரோபோடிக்ஸ், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 61 துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த திறன் போட்டிகள் நடைபெற்றது.
40 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு
இதில் நாடு முழுவதும் இருந்து 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து 86 பேர் பங்கேற்ற நிலையில், அதில் 6 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம், 17 சிறப்பு பதக்கங்கள் என மொத்தம் 40 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான திறன் போட்டியில் ஒடிசா முதலிடமும், கர்நாடகா இரண்டாம் இடமும் தமிழ்நாடு மூன்றாம் இடமும் பெற்றுள்ளது. இந்திய திறன் போட்டியில் தங்கம் வென்ற 6 மாணவர்கள், வருகிற செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ‘உலக திறன் போட்டி’க்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் இவா்களுக்கு சிறந்த தொழில்துறை பயிற்சியாளா்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் போட்டியில் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 1,500 போட்டியாளா்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அளவிலான திறன் போட்டியில் தமிழ்நாடு 21 பதக்கங்களை வென்ற நிலையில், ‘நான் முதல்வன் திட்ட’த்தில் பயிற்சி பெற்ற பின், தற்போது நடைபெற்ற திறன் போட்டியில் 40 பேர் பதக்கம் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.