Amazing Tamilnadu – Tamil News Updates

மும்பை பொதுக்கூட்டம்: ‘இந்தியா’ கூட்டணிக்கு நம்பிக்கை கொடுத்த மு.க. ஸ்டாலின்!

காங்கிரஸ் எம்பி-யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ ‘ யாத்திரை, நேற்று மும்பையில் நிறைவடைந்தது. இதையொட்டி, மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க்கில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி , ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நெகிழ்ந்து போன ராகுல் காந்தி

இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மேடையில் ராகுல் காந்தியைக் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வரலாற்றை விவரிக்கும் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பை வழங்கினார். தொடர்ந்து ராகுல் காந்தியை “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி…” என விளித்தபோது அவர் நெகிழ்ந்து போனார். அரங்கத்திலும் கைத்தட்டல் அதிர்ந்தது.

‘இந்தியா’ கூட்டணிக்கு நம்பிக்கை

கன்னியாகுமரியில் ராகுலின் ஒற்றுமை பயணத்தைத் தாம் தொடங்கி வைத்ததைப் பெருமையுடன் குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், “மும்பையை அடைந்துள்ள உங்கள் பயணம், விரைவில் டெல்லியை எட்டும். ‘இந்தியா’ கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

பாஜக-வுக்கு விளாசல்

அதன் பின்னர், பாஜக மற்றும் மோடி பக்கம் தனது பேச்சைத் திருப்பினார் ஸ்டாலின், “கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள். மற்றொன்று பொய்ப் பிரசாரம்.

பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு! ‘இந்தியா’ கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, ‘இந்தியா’ என்ற சொல்லையே பா.ஜ.க தவிர்க்கத் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடி நம் கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.க.தான் என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தி விட்டது.

8,000 கோடி ரூபாய் அளவில் தேர்தல் பத்திரம் பெற்று பாஜக வெளிப்படையாகவே (ஒயிட் காலர்) ஊழல் செய்துள்ளது. இது பா.ஜ.க.வின் நவீன ஊழல். இத்தகைய அரசின் பிரதமர் ஊழலை பற்றி பேசுகிறார். இப்படிப்பட்ட பிரதமர் ஊழல் குறித்து வாய்திறக்கலாமா?” எனக் காட்டமாக கேள்வி எழுப்பியபோது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

மொத்தத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தில் பாஜக-வை விளாசித் தள்ளிய மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தியை நெகிழச் செய்து, ‘இந்தியா’ கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளார்.

தேர்தல் பத்திரம்

முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான தகவல்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டது. மொத்தம் 16,518 கோடி ரூபாய்க்கான தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக பாஜக ஏறக்குறைய 50 சதவீத தேர்தல் பத்திரங்கள் மூலம், அதாவது 8,251.8 கோடி ரூபாய்க்கான நிதியைப் பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டுமே தாங்கள் யார் யாரிடமிருந்து எவ்வளவு நன்கொடை வாங்கி உள்ளோம் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளன. பாஜக அந்த விவரங்களை வெளியிடவில்லை.

திமுக தரப்பில் அந்த கட்சியே முன்வந்து, 656.5 கோடி ரூபாய் வாங்கியிருப்பதாக முன்வந்து தெரிவித்துள்ளது. அதே சமயம், பாஜக-வைப் போன்று அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறை போன்ற ஏஜென்சிகளை ஏவிவிட்டு, நிறுவனங்களை மிரட்டி நன்கொடை வாங்கவில்லை என அக்கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version