முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 2021 மே மாதம் பதவியேற்றதிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் பால் வளத்துறையினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பால் கொள்முதல் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துதல், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆவின் பாலை குளிரூட்டும் வகையில் சேமிப்புக் கிடங்குகளை அமைத்தல், நுகர்வோரின் தேவையறிந்து அதற்கேற்ப ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் ஆவின் நெய், ஐஸ்கீரிம், யோகார்ட், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒய்ட்னர், 40 நாட்கள் வரையில் கெட்டுக் போகாமல் இருக்கும் பதப்படுத்தப்பட்ட பால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆவின் பால் பவுடர் உற்பத்தியை அதிகரித்தல், பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை அவ்வப்போது உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பால் கொள்முதல் மற்றும் விநியோகம்
தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 3.85 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் தற்போது நாளொன்றுக்குச் 35.67 இலட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 இலட்சம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்தது போக, 31.67 இலட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 22.7.2021 அன்று ஆவின் நிறுவனம் 43.05 இலட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும், பால் கொள்முதலை அதிகரிக்கும் பொருட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயிலிருந்து 35 ஆகவும், எருமைப் பாலின் விலை லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 18.12.2023 முதல் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
18.12.2023 முதல் ஏப்ரல் 2024 வரையான காலத்திற்கு 108.30 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாகப் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களும் பயனடைந்து வருகின்றனர். மேலும், இந்திய அளவில் பால் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசின் பால் வளத்துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளால் பால் உற்பத்தி அதிகரிப்பு
இந்திய அளவில் பால் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசின் பால் வளத்துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூபாய் 21.75 கோடிச் செலவில் 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட 4 எண்ணிக்கையிலான மொத்த பால் குளிர்விப்பு நிலையங்களும் மற்றும் 5000 லிட்டர் கொள்ளவு கொண்ட 143 எண்ணிக்கையிலான மொத்த பால் குளிர்விப்பு நிலையங்களும் நிறுப்பட்டுள்ளன.
ரூபாய் 18.76 கோடி செலவில் 866 தானியங்கி பால் சேகரிப்பு அலகுகளும், 350 எண்ணிக்கையிலான செயலாக்க தரவு பால் சேகரிப்பு அலகுகளும், 1074 எண்ணிக்கையிலான பால் பகுப்பாய்வு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. ஈரோடு ஒன்றியத்தில் உள்ள கால்நடை தீவன தயாரிப்புத் திறன் நாள் ஒன்றுக்கு 150 மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து நாள் ஒன்றுக்கு 300 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிராம அளவில் எருமை கன்று வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் எருமை கன்று வளர்ப்பு திட்டத்தின் கீழ் 2000 எருமை கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு பருவ ஒருங்கிணைப்பு மற்றும் பாலின விந்து கருவூட்டல் மூலம் 820 இலட்சத்தில் 12 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது
பால் உற்பத்தியாளர்களின் 5 இலட்சம் கறவை மாடுகளுக்கு 85% மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கறவைகளின் சினை பிடிக்கும் திறனை அதிகரிக்க 5000 கறவைகளுக்கு சினைதருண ஒருங்கிணைத்தல் திட்டம் 2022-23ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளினால் ஆவின் பால் விற்பனை 2023-2024 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 31.37 இலட்சம் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு பால் விற்பனையை ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டு ஏறத்தாழ 23% அதிகரித்துள்ளதாகவும், இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணைகளின் இணையம் (NCDFI) மூலம் 2021-22 ஆம் ஆண்டு ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருள்களை மின்ணணு வாயிலாக ரூ.590/- கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக ஆவின் நிறுவனத்திற்கு இந்திய அளவில் இரண்டாமிடத்திற்கான விருது வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டதாகவும் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.