நல்ல ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்தான். ஆனால் அதில் அதீத மூர்க்கத்தனம் காட்டினால், அது ஆளையே கொன்றுவிடும் என சென்னையில் நடந்த பாடி பில்டர் ஒருவரின் திடீர் மரணம் நமக்கு உணர்த்துகிறது.
உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று உடலில் போதுமான நீர்ச்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுதான். அதை கவனிக்காமல் நீரிழப்பு ஏற்பட்டால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கடுமையான உடற்பயிற்சி செய்வதை கட்டாய வழக்கமாக கொண்டிருப்பவர்கள்தான் இதில் மிகவும் எச்சரிக்கையாகவும் அலட்சியம் காட்டாமலும் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் போனதால்தான், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த யோகேஷ் என்ற பாடிபில்டர் கடுமையான உடற்பயிற்சிக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
யோகேஷ் 2022-ம் ஆண்டில் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டம் வென்றவர். திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இவர் ஜிம்மில் பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அடுத்தமாதம் நடைபெற உள்ள ‘மிஸ்டர் தமிழ்நாடு’ போட்டியில் மீண்டும் பட்டம் வெல்லவேண்டும் என்ற ஆர்வத்தில், சமீப நாட்களாக கொரட்டூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேர கடுமையான உடற்பயிற்சிக்குப் பின்னர் அவருக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அதனால் ‘நீராவிக் குளியல்’ ( Steam Bath) எடுக்கச் செல்வதாகவும் கூறிவிட்டு, அங்கிருந்த ரெஸ்ட் ரூமுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராததையடுத்து, சக பயிற்சியாளர்கள் சந்தேகமடைந்து, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
பொதுவாக இப்படி போட்டிக்கு தயாராகும் பாடிபில்டர்கள் கடுமையான உடற்பயிற்சிக்குப் பின்னர் ‘நீராவிக் குளியல்’ எடுக்கக்கூடாது. உடல் தசைகள் புடைத்துக் காணப்பட வேண்டும் என்பதற்காக இவர்கள், ஏற்கெனவே இவர்கள் மிக மிக குறைந்த அளவில், இன்னும் சொல்லப்போனால் அவுன்ஸ் கணக்கில்தான் தண்ணீர் எடுத்துக்கொள்வார்கள். இதனால் அவர்களது உடம்பில் நீர்ச் சத்து மிகக்குறைவாகவே காணப்படும். அப்படியான நிலையில், கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது, அவர்கள் உடம்பில் மேலும் நீர்ச்சத்து இல்லாமல் போய்விடும்.
” இத்தகைய சூழ்நிலையில், உடற்பயிற்சியை முடித்தவுடன் நீராவிக் குளியல் எடுத்தால், அது உடலில் மேலும் நீர்ச் சத்து இல்லாமல் ஆக்கி, உடலில் உள்ள உப்புச் சத்தை சமநிலையற்றதாக்குவதோடு, நுரையீரலில் ரத்த உறைவையும் ஏற்படுத்தி சுவாசிக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்” என்பதே மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
எனவே உடலில் நீர்ச்சத்து இழப்பு என்பது ஒரு ‘சைலன்ட் கில்லர்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது குறித்து விழிப்புடன் இருப்பதோடு, உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிய ஆலோசனைகளுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவதே நல்லது!