Amazing Tamilnadu – Tamil News Updates

ஆளுநர் உரையை படிக்க மறுப்பு… வெளியேறிய ஆளுநர் ரவி… சபாநாயகரின் பதிலடி!

மிழ்நாடு சட்டசபை இன்று காலை கூடிய நிலையில், மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை தம்மால் படிக்க முடியாது என மறுத்து விட்டு, சில நிமிடங்களிலேயே ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது திட்டமிட்ட செயலாகவே விமர்சிக்கப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது வருகைக்கு முன்னதாகவே சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்கள் அவையில் வந்தமர்ந்திருந்தனர். இந்த நிலையில், ஆளுநர் அவைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.

உரையை வாசிக்க மறுத்த ஆளுநர்

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மரபுப்படி மாநில அரசு தயாரித்து வழங்கிய உரையை படிக்க வேண்டிய ஆளுநர் ரவி, அதனை படிக்க மறுத்தார். “தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். தேசிய கீதம் இல்லாமல் சட்டசபையைத் தொடங்கி இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. அரசின் இந்த உரையில் பல பத்திகள் உள்ளன. உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் எனக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், நன்றி” என்று கூறி தனது உரையை முடித்தார்.

சபாநாயகரின் பதிலடி… வெளியேறிய ஆளுநர்

இதனையடுத்து எழுந்த சபாநாயகர் அப்பாவு, “ஆளுநரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொன்னீர்கள். இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND-ல் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ரூ. 50,000 கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்” என ஆளுநருக்குப் பதிலடி கொடுத்தார்.

மேலும், ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

‘சாவர்க்கர், கோட்சே’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே, சபாநாயகர் ஏதோ விமர்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. ஆளுநர் தனது இருக்கையிலிருந்து எழுந்ததைப் பார்த்ததுமே சபாநாயர் அப்பாவு, “ஜன கன மண… ” கடைசியில் பாடப்படும் என்றார். ஆனாலும், ஆளுநர் அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அவையிலிருந்து வெளியேறினார். இதனால், அவையில் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து ஆளுநரின் உரையை சட்டசபையில் பதிவு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவி பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு. அவையில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தவா?

கேரளாவிலும் அந்த மாநில ஆளுநர் இதேபோன்று ஆளுநர் உரையை படிக்க மறுத்த நிலையில், தமிழ்நாட்டு ஆளுநரும் அரசின் உரையைப் படிக்க மறுத்துள்ளார். இதுநாள் வரையிலும், மரப்புபடி ஆளுநர் உரை தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆளுநர் இப்படி தொடக்கத்திலேயே தேசிய கீதத்தைப் பாட வேண்டும் எனக் கேட்டு உரையை வாசிக்க மறுப்பது, வேண்டுமென்றே கடந்த ஆண்டைப் போல குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், #GetOutRavi என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ கேரள ஆளுநராவது 2 நிமிடம் உரையை வாசித்தார், தமிழ்நாடு ஆளுநர் உரையை வாசிக்கவே இல்லை. இன்னும் ஒரு 2 நிமிடங்கள் பொறுத்து இருந்து தேசிய கீதத்தையும் மதித்து உரிய மரியாதையோடு ஆளுநர் சென்றிருக்க வேண்டும். தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராகவும், ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவே உள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.

அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், “தேசிய கீதத்தை ஒருமுறை பாடினால் தேச பக்தி இல்லை என்பது போலவும், இரு முறை பாடினால் தேச பக்தி அதிகம் என்பது போலவும் ஆளுநர் சித்தரிக்க நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது” என விமர்சித்தார்.

Exit mobile version