Amazing Tamilnadu – Tamil News Updates

ஆளுநர் அடித்த யு டர்ன்!

திமுக அரசு தொடர்ந்த வழக்கு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய விமர்சனம் போன்றவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதால் தான், தன்னிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10 சட்ட மசோதாக்களை அவர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பதாக தெரிகிறது.

ஆளுநர் அடித்துள்ள இந்த யு டர்ன், அரசியலமைப்பு சாசனத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறைக்கு இருக்கும் பங்கையும், ஆளுநர் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தி உள்ளது.

“தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தமிழக அரசாணைகளுக்கும் ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்” என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விமர்சித்த உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர்களின் இந்த போக்கு குறித்து மிக கடுமையாக விமர்சித்திருந்தது. “சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அரசமைப்பு சட்டப்பிரிவு 200 ன் படி மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இத்தனை காலம் என்ன செய்தார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல ஆளுநர்கள். உச்ச நீதிமன்றம் வரை வந்த பிறகுதான் ஆளுநர்கள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டுமா..?” என்றெல்லாம் காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தது உச்ச நீதிமன்றம்.

மேலும், இவ்வழக்கு விசாரணை மீண்டும் வர உள்ள நிலையிலேயே, ஆளுநர் ஆர்.என். ரவி அவசரமாக தனது நிலைப்பாட்டிலிருந்து யு டர்ன் அடித்து, தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை, விளக்கம் கேட்பதாக கூறி, அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இந்த மசோதாக்கள் குறித்து தமிழக அரசு எவ்வித விளக்கமும் அளிக்கப்போவதில்லை என்பதும், விதிப்படி அவற்றை அப்படியே மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதை தவிர வேறு வழியில்லை என்பதும் ஆளுநருக்கும் நன்றாக தெரியும்.

சட்டமன்றத்தைக் கூட்டும் தமிழக அரசு

இந்த நிலையில், தமிழக அரசின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் வரும் சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில், இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட உள்ளது . இதனை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசு சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியிருந்தது. ஆளுநர் அதை திருப்பி அனுப்பியிருக்கிறார். மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு விரும்புகிறது. இதனால், அவசர சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மறுநாள் கூட்டப்படுகிறது. அதில் என்னென்ன விசயங்கள் விவாதிக்கப்படும் என்பதை அரசுதான் தீர்மானிக்கும்.

அப்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது.ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளின்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பக்கூடிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.

எனவே, சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் மாளிகையுடனான மோதலில் தமிழக அரசுக்கான வெற்றிக்கு அடித்தளமிடும் என எதிர்பார்க்கலாம்!

Exit mobile version