Amazing Tamilnadu – Tamil News Updates

“ஆளுநரை கூட எதிர்க்க முடியாத எடப்பாடியா தமிழ்நாட்டை மீட்கப் போகிறார்..?!” – தேர்தல் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் காட்டம்!

மிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதவி சுகத்திற்காக, மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்தவர் என்று கடுமையாக சாடினார். மேலும், பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கபட நடகம் நடத்துவதாக குற்றம் சாட்டிய மு.க. ஸ்டாலின், எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து எடப்பாடி ஒரு வார்த்தையாவது பேசுகிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

ஆளுநரை எதிர்த்துப் பேசுவாரா எடப்பாடி?

தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் பற்றி மட்டுமல்ல; ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை! இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார்! ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?

ஆளுநரால் இந்தத் தனிப்பட்ட ஸ்டாலினுக்கோ – தி.மு.க.விற்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கும் – எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா? இல்லை, பாகப்பிரிவினை, பங்காளி சொத்து பிரச்சினையா? தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதைத் தடுக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களுக்கும் – சட்டமுன்வடிவுகளுக்கும் அனுமதி அளிக்க மறுக்கிறார். இதுதான் எங்களுக்கும் அவருக்குமான பிரச்னை!

நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் – உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும்… வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள். அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை.

ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான்!

‘முதலில் பாஜக-விடம் இருந்து அதிமுக-வை மீட்கட்டும்’

அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் – 2019 நாடாளுமன்றத் தேர்தல் – 2019-இல் நடந்த 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் – 2019-ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2021 சட்டமன்றத் தேர்தல் – 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்று 8 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது. எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக. வந்த பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அதிமுக.

இதற்கெல்லாம் காரணம் பா.ஜ.க.வுக்கு அடிமை சேவகம் செய்து, தமிழ்நாட்டு உரிமைகளை மொத்தமாக தாரைவார்த்து துரோகம் செய்ததுதான்! இப்படி துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? பழனிசாமி அவர்களே… முதலில், பாஜக-விடம் இருந்து அதிமுக-வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி – பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி – அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version