எம்.ஜி.ஆரின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டவர் தமிழக முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர் கழகத்தின் தலைவருமான ஆர்.எம்.வீரப்பன். மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார். 98 வயதாகும் ஆர்.எம்.வீரப்பனின் மறைவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எம்.வீ என்று அழைக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், புதுக்கோட்டை மாவட்டத்தின் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், 1953 ஆம் ஆண்டில் துவங்கிய எம்ஜிஆர் நாடக மன்றம் மற்றும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாகியாக நெடுங்காலம் பொறுப்பிலிருந்தவர் ஆர்.எம்.வீ.
எம்.ஜி. ஆரின் நிழல்
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்திற்கான கடன் பத்திரங்களில் எம்ஜிஆரின் சார்பாகக் கையெழுத்திட்டவர் வீரப்பன்தான். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தபோது, அவர் யார் படங்களில் நடிக்கலாம், எத்தககைய கதையைத் தேர்ந்தெடுக்கலாம், யார் இயக்கலாம் என்பனவற்றையெல்லாம் முடிவு செய்யும் நிலையில், அவரது நிழல் என வர்ணிக்கும் அளவுக்கு இருந்தவரும் வீரப்பன்தான். வீரப்பனை எப்போதும் எம்.ஜி.ஆர் “முதலாளி” என்றே அழைப்பார். அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை கொடுத்து வைத்திருந்தார்.
எம்ஜிஆர், திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக என்ற தனிக் கட்சியை துவங்குவதற்கு பின்னணியில் பல்வேறு பணிகளைச் செய்தவர் வீரப்பன். 1977 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை இருமுறை தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும்1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் இரு முறை தமிழக சட்டபேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றினார்.
ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்து நீக்கம்
1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல் நலக்குறைவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத போது, ஆர்.எம்.வீரப்பன் தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் கட்சி பிளவுபட்டபோது, அதிகப்படியாக 98 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகியை முதலமைச்சராக பதவியில் அமர வைக்க ஆர்.எம்.வீரப்பனின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
அவரது சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த ‘பாட்ஷா’ பட வெள்ளி விழாவில் பேசிய ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார். ஜெயலலிதா அமைச்சரவையில் வீரப்பன் உணவு அமைச்சராகப் பதவி வகித்த நிலையில், இந்த நிகழ்வுக்குப் பின்னர் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும், பின்னர் அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார் ஆர்.எம். வீ. இதனைத் தொடர்ந்து, “எம்.ஜி.ஆர். கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995 ஆம் ஆண்டு தொடங்கினார். ஆனால் அது பெரிய அளவில் எடுபடவில்லை என்பதால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். அதே சமயம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடனும் இணக்கமாக இருந்தார்.
அண்ணா, பெரியாரின் உதவியாளர்
இப்படி ஆர்.எம்.வீ என்று சொன்னாலே எம்.ஜி.ஆர் பெயர் நினைவுக்கு வரும் அளவுக்கு அவரின் நிழலாக இருந்த ஆர்.எம்.வீ குறித்த அதிகம் அறியப்படாத ஒரு சுவாரஸ்யமான செய்தி, அவர் எம்.ஜி.ஆரிடம் வருதற்கு முன்னர் அண்ணாவிடமும் தந்தை பெரியாரிடமும் உதவியாளராக பணியாற்றியவர் என்பதுதான்.
அப்போது அண்ணாவிடம் உதவியாளராக இருந்தவர் வீரப்பன். அந்த சமயத்தில் ஈரோட்டில் உடனிருந்து தங்கி உதவி செய்வதற்கு நம்பிக்கையான ஓர் இளைஞர் வேண்டுமென்று பெரியார் தம் நண்பர்கள் பலரிடமும் கூறியிருந்தார். இதனையடுத்து “ஒரு நல்ல உதவியாளர் கிடைக்கும்வரை என்னிடம் பணியாற்றுகின்ற வீரப்பாவை அனுப்பிவைக்கிறேன்… தங்களுக்கேற்ற ஆள் கிடைத்தவுடன் இவரைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்,” என்ற கோரிக்கையோடு பெரியாரிடம் அண்ணாவால் உதவியாளராக அனுப்பி வைக்கப்பட்ட இளைஞர்தான் ஆர் எம் வீரப்பன்.
பின்னர், “ஐயா… வீரப்பாவைத் திருப்பி அனுப்புகிறீர்களா?” என்னும் அண்ணா கடிதத்துக்கு “நான் வீரப்பாவைத் திருப்பி அனுப்புவதாக இல்லை… எனக்கு இப்படியோர் ஆள் கிடைக்கமாட்டான். நீ வேறு ஆள் தேடிக்கொள்,” என்று கடிதமெழுதிப் போட்டுவிட்டாராம் பெரியார். அந்த அளவுக்கு பெரியாரின் நம்பிக்கையைப் பெற்றவராக திகழ்ந்தவர் ஆர்.எம்.வீ.
இப்படி அண்ணா, பெரியார் ஆகிய இருவரிடமும் வீரப்பனுக்கு இருந்த நற்பெயரைப் பார்த்தே எம்ஜிஆர், அவரை வேண்டி விரும்பி அழைத்துக்கொண்டார். அவரும் கடைசி வரை தன் மீதான நம்பிக்கைக்கு விசுவாசமாக நடந்து, இப்பூவுலகில் இருந்து மறைந்துள்ளார்.