மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகிலுள்ள யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அம்மாள், இன்று தமிழகமே வியந்து பாராட்டுகிற கொடை உள்ளம் கொண்ட பெண்.
அரசு பள்ளிக்கு தனது 7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கி மதுரை மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்த ஆயி அம்மாளுக்கு குடியரசு தின விழாவில், முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி தமிழக அரசு பெருமைப்படுத்த உள்ளது பாராட்டுக்குரியது தான் என்றாலும், அவரது ஆசையை கல்வித்துறை நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1000 ரூபாய்க்கு அன்னதானம் வழங்கிவிட்டு 10,000 ரூபாய்க்கு ஃப்ளக்ஸ் பேனர் வைத்து தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளும் தான பிரபுக்கள் நிறைந்த சமூகத்தில் தான் ஆயி அம்மாள்களும் நடமாடுகின்றனர். செய்த உதவியைச் சொல்லக்கூட கூச்சப்பட்டும், பாராட்ட வருபவர்களை எதிர்கொள்ள முடியாமல் சங்கடப்பட்டும் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளில் தங்கும் அளவுக்கு ‘அப்படி என்ன செய்துட்டோம்…’ என்ற ரீதியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத 52 வயது ஆயி அம்மாளின் கொடை உள்ளத்தை உலகுக்கு அறியச் செய்தவர் மதுரை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.
தனது 8 வயதிலேயே பெற்றோரை இழந்த ஆயி அம்மாள், யா.கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில்தான் படித்தார். 18 வயதிலேயே திருமணம். கணவருக்கு கனரா வங்கியில் பணி. மகள் ஜனனி பிறந்த ஒன்றரை வருடத்திலேயே, விபத்தில் கணவர் இறந்த நிலையில், அவருக்கு கருணை அடிப்படையில கனரா வங்கியில வேலை கிடைத்தது. மகள் ஜனனிதான் தனது உலகம் என இருந்தார் ஆயி அம்மாள்.
ஆயி அம்மாளுக்கு உதவும் குணம் என்பது பிறப்பிலேயே வந்த குணம் என்று தான் சொல்ல வேண்டும். இவரது தாத்தா-பாட்டி தான தர்மங்கள் அதிகம் செய்தவர்கள். அந்த வழியில இவரது தந்தையும் நிறைய உதவிகள் செய்துள்ளார். அப்படியானவர்களின் குடும்பத்தில் பிறந்த ஜனனியுமே பள்ளி, கல்லூரி நாட்களில் சக மாணவர்களுக்கு கல்விக்காக உதவும் உள்ளம் கொண்டவராக இருந்துள்ளார். திருமணத்துக்குப் பின்னர் 30 வயதில் திடீரென ஜனனி இறந்துவிட்ட நிலையில், மகளின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்துப்போய்விட்டார் ஆயி அம்மாள்.
இந்த நிலையில், கல்விக்காக உதவ வேண்டும் என இறப்பதற்கு முன்னர் மகள் ஜனனி அடிக்கடி கூறி வந்ததை நினைத்து, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே, தனது தந்தை திருமணச் சீராகக் கொடுத்த. தற்போதைய சந்தை மதிப்பில் 7 கோடி ரூபாய் விலை போகும் ஒரு ஏக்கர் 52 சென்ட் நிலத்தை, தமிழக அரசின் ‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்தின் கீழ், தான் படித்த யா.கொடிக்குளம் பள்ளிக்கூடத்துக்கு தானப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதலின் பேரில், ஜனவரி 5 ஆம் தேதியன்று ஆவணத்தைப் பதிவு செய்து கல்வித்துறையில ஒப்படைத்துவிட்டு, சத்தமே இல்லாமல் வங்கிக்கு வந்து வழக்கமான பணியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதை எப்படியோ தெரிந்துகொண்ட மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன், ஆயி அம்மாள் பணியாற்றிக் கொண்டிருந்த கனரா வங்கிக்கே நேரில் சென்று பாராட்டிய பிறகுதான் மதுரை கல்வி தேவதையின் இந்த விஷயமே வெளியே தெரிந்தது.
இத்தகைய கொடை உள்ளம் கொண்டவரை தமிழகமே இன்று வியந்து பாராட்டும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “குடியரசு நாள் விழாவில், அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார். அதன்படி நாளை குடியரசு தின விழாவில், ஆயி அம்மாளை தமிழக அரசு பெருமைப்படுத்த உள்ளது.
இது பாராட்டுக்குரியதுதான். அதே சமயம், ‘அந்த அரசுப் பள்ளிக்கு தான் உயிருடன் இருக்கும்போதே நம்முடைய நிலத்தை கொடுக்கவேண்டும்’ என்று சொன்ன தனது மகள் ஜனனியின் பெயரை அதற்கு சூட்ட வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார் ஆயி அம்மாள்.
அவரது அந்த ஆசையை தமிழக அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 7 கோடி ரூபாய் நிலத்தை தானமாக கொடுத்தவரின் அந்த ஆசை நியாயமானது தான். தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நல்ல அறிவிப்பை அரசு அறிவிக்கும் என நம்புவோம்!