Amazing Tamilnadu – Tamil News Updates

அதிக கட்டணம்: நீதிமன்ற உத்தரவால் ஆம்னி பேருந்துகளின் போக்கில் மாற்றம் வருமா?

ண்டிகை நாட்களின்போதும், சனி, ஞாயிறு போன்ற தொடர் விடுமுறை நாட்களின்போதும் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுவதும், இதனையடுத்து அவ்வப்போது அதிகாரிகள் சோதனை நடத்தி, அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதும் தொடர் கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால், ‘ இனி அபராதமெல்லாம் கிடையாது, அதிரடி நடவடிக்கைதான்’ என்ற ரீதியில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 1,600-க்கும் அதிகமான ஆம்னி பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதை வாய்ப்பாக பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக கட்டணம் வசூலிப்பதை காட்டிலும், பல மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக புகார் வந்தால், சோதனை மற்றும் அபராதத்துடன் புகார் மீதான நடவடிக்கை முடிந்து விடுகிறது. சில நாட்களுக்குப் பின்னர், அதே பேருந்துகள் மீண்டும் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில்தான், ‘அபராதம் விதிப்பதால் மட்டுமே தீர்வு ஏற்படாது; கடுமையான சட்ட நடவடிக்கை வேண்டும்’ எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை என்றும், அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதாகவும், இதனால்தான் தனியார் பேருந்துகள் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும் கூறினார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிக கட்டண புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபடுவதாகவும், விதிகளை மீறும் பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு அபராத தொகையை 50,000 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.

உரிமம் ரத்து

மேலும், “அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, ஆம்னி பேருந்துகள் பின்பற்றுமா, இல்லை பழைய போக்கையே தொடருமா என்பது வரவிருக்கும் தொடர் விடுமுறை நாட்களில் தெரிந்துவிடும்.

Exit mobile version