ஆண்டுக்கு 3 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகள்… அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் தமிழக ஐடி துறை!
இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத் துறை தொழிலில் கோலோச்சும் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழும் நிலையில், மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அத்துறை வழங்கி வருகிறது.
இத்தகைய சாதனைகள் ஒருபக்கம் இருந்தாலும், பெங்களூரு போன்ற நமது அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அதன் வளர்ச்சியை குறிப்பாக, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான கூடுதல் முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு மாதமும் 25,000 கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பணியாளர்கள் தேவை
தமிழ்நாடு, நீண்ட காலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தனது வலுவான கல்வி உள்கட்டமைப்பு, துடிப்பான தொழில் முனைவோர்கள், சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஆதரவான அரசாங்கக் கொள்கைகள் மூலம், தமிழகம் ஏராளமான ஐடி நிறுவனங்களையும் ஸ்டார்ட்அப்-களையும் ஈர்த்துள்ளது. அதே சமயம் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், திறமையான தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான எண்ணிக்கையைத் தமிழகம் இன்னும் அதிகப்படுத்த வேண்டியதுள்ளது. அப்படி செய்தால் தான், வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கும், வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
மேலும் புதுமையான தொழில் முனைவோர் சூழலை வளர்ப்பதும் மற்றொரு அவசியமாக உள்ளது. ஸ்டார்ட் அப்-களை ஊக்குவிப்பதில் மாநிலம் முன்னேற்றம் அடைந்தாலும், மூலதனம், வழிகாட்டுதல் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குவதில் இன்னும் முன்னேற்றம் தேவையாக உள்ளது. அதிக ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதுமையான தீர்வுகள் மற்றும் ரிஸ்க் எடுப்பதை ஊக்குவிப்பது போன்றவையே இத்துறையின்
நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும்.
“இந்த இலக்கை அடைய, தமிழ்நாடு பல முக்கிய உத்திகளில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக, தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. தொழில்துறையினருடன் கலந்தாலோசிப்பதன் மூலம், கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டத்தை தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்க முடியும். இதன் மூலம் அங்கிருந்து படித்து வெளியேறும் பட்டதாரிகள், வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன்களுடன் இருப்பதை உறுதி செய்ய முடியும்” என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.
மாதம் 25,000 கூடுதல் வேலை வாய்ப்புகளுக்கு இலக்கு
இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, தற்போதைக்கு தமிழ்நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மாதந்தோறும் கூடுதலாக 10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் ஒவ்வொரு மாதமும் 25,000 கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
சென்னையில் இந்தியத் தொழில் கூட்டமைப்பான CII மற்றும் தமிழ்நாடு அரசின் எல்காட் (ELCOT) நிறுவனம் இணைந்து ஒருங்கிணைத்த ‘கனெக்ட் 2023’ மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், அதற்காக இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருவதாகவும் கூறினார். மாதம் 25,000 வேலை வாய்ப்புகள் என்றால், ஆண்டுக்கு 3 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபி-யில் சுமார் 15 சதவீதம் ஐடி துறை பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் இத்துறையை வேகமாக விரிவாக்கம் செய்வதன் மூலம் இத்துறையின் வளர்ச்சி வாயிலாகத் தமிழ்நாட்டின் ஜிடிபி 1 ட்ரில்லியன் டாலர் அளவீட்டை எட்டும் என எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகத் தலைவர் எஸ் அருண் ராஜ் தெரிவித்துள்ளதைப் பார்க்கும்போது, தமிழகம் ஐடி துறையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராவதைப் பார்க்க முடிகிறது.