அரசு தொலைதூர பேருந்துகளிலும் இனி கிரெடிட், டெபிட் கார்டில் டிக்கெட் வாங்கலாம்!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இனி யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், தொலை தூரங்களுக்கு பயணிக்கும் பயணிகள், இனி கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ள முடியும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ரயில் பயணங்கள் கைகொடுக்காத சூழலில் பெரும்பாலான மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வது பேருந்து சேவைகள் தான். அதிலும் சென்னை, கோவை போன்ற நகரங்களில் வேலைவாய்ப்பு நிமித்தம் செட்டிலானவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள நினைக்கும்போது உடனடியாக கைகொடுப்பது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தான். தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் சாமானியர்களுக்கு கட்டுப்படியாகாது என்பதால், அரசு பேருந்துகள் தான் அவர்களின் தேர்வாக உள்ளது. இதே கதைதான் நகரப் பேருந்துகளிலும். அந்த வகையில், தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 72 சதவீதம் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் மட்டுமே இயக்கப்படுகிறது.
தினமும் 15,000 பேர் முன்பதிவு
அதன்படி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பக்கோணம், நெல்லை, மதுரை போக்குவரத்து கழகங்கள் என 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், அதேபோல வெளியூர்களில் இருந்து சென்னைக்கும் தினசரி 2,100 பேருந்துகளை அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் இணைந்து இயக்குகின்றன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதன பேருந்து, குளிசாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, குளிசாதனமில்லா படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, கழிப்பறை வசதி கொண்ட பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்கு முன்பே இணையதளம், செல்போன் செயலி மூலம் மின்னணு முன்பதிவு செய்யும் வசதிகள் உள்ளது.
இந்த பேருந்துகளில் பயணிப்பதற்காக தினமும் 15,000 பேர் முன்பதிவு செய்து வருவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மக்கள் பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற வசதியாக மின்னணு டிக்கெட் இயந்திரம் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட்
“அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 22 பணிமனைகளில் மொத்தம் 1,078 பேருந்துகள் உள்ளன. அண்டை மாநிலங்களை இணைக்கும் விதமாக 251 வழித்தடங்களிலும், தமிழ்நாட்டில் 139 வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 2010-11 முதல் மின்னணு பயணச்சீட்டு சாதனங்கள் வாயிலாக பயணச்சீட்டுகள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. கையடக்கமாக உள்ள இந்த சாதனத்தில், கட்டண விகிதங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம் பயணச்சீட்டுகளை வழங்குவது எளிதாக இருந்தது.
இந்நிலையில் தற்போது மேலும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதமாக யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்களை பெரும் விதமாக மின்னணு டிக்கெட் இயந்திரம் விரைவில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கியிடம் இயந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ளோம், வங்கி தரப்பில் இயந்திரங்களை தயாரித்துக் கொடுக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்த இயந்திரத்தின் சோதனைகள் முடிவடைந்துள்ளது. இயந்திரங்களை எந்த விலையில் எவ்வளவு வாங்குவது உள்ளிட்ட ஆலோசனைக்கு பிறகு அரசு ஒப்புதல் வழங்கிய பின் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்.
நடத்துநருக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு
பயணிகள் செலுத்தும் பணம் நேரடியாக வங்கி கணக்குக்கு செல்லும் என்பதால், பணம் கையாளுவது குறைகிறது. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கிறது. நடத்துநர்கள் ஒரு பணிமனையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே பணிமனைக்கு வருவார்கள். இந்த நேரத்தில் இரண்டு ட்ரிப்புக்கான டிக்கெட் கட்டணத்தையும் அவர்கள் தங்களது பைகளில் வைத்திருப்பர். தற்போது நேரடியாக வங்கி கணக்குக்கு செல்லும் என்பதால், அவர்களுக்கு கையில் பணம் உள்ளதே என்ற பயமில்லாமல் இருப்பார்கள். மேலும் சில்லறை பிரச்னையும் இருக்காது. இது பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யாமல் பயணிப்பவர்கள் இனி, இந்த புதிய மின்னணு இயந்திரம் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாகவும், யுபிஐ செயலிகள் மூலமாகவும் பணம் செலுத்த முடியும். இதனால், பயணிகளும் தங்கள் கையில் அதிகமாக பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், கையில் பணம் இல்லாத சூழலில் அவசரத்திற்கு கிரெடிட் கார்டையும் பயன்படுத்தி பயணிக்க முடியும் என்பதால், தொலைதூர பயணிகளுக்கு இது நிச்சயம் பயனளிக்கக் கூடியதாகவே இருக்கும்!