இனி EMIS பணி இல்லை… அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணிச்சுமை குறைகிறது!
அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களையும் சேமிக்கும் வகையில், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (Educational Management Information System – EMIS) என்ற இணையதளத்தை 2018 ஆம் ஆண்டு அரசு அறிமுகப்படுத்தியது. இது மாணவர் தரவு, கல்வித் திட்டங்கள், பணியாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய கல்வி செயல்முறைகளை நிர்வகிப்பதில் கல்வி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
EMIS இணையதள வேலையால் ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை
மேலும், கல்வி நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், முடிவெடுக்கும் செயல்முறைகளை மேம்படுத்தவும் மற்றும் கல்வி முடிவுகளை மேம்படுத்தவும் EMIS உதவிகரமாக உள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த அமைப்பை பயன்படுத்தி, மாணவர்களின் செயல்திறன் குறித்த அறிக்கைகளை உருவாக்கவும், மாணவர் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், பள்ளியின் வளங்களை நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படலாம்.
இதன் மூலம், நிர்வாகிகள் மாணவர் வருகையை கண்காணிக்கலாம், வராத முறைகளை அடையாளம் காணலாம் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளுக்கு வருவதை உறுதிசெய்ய சரியான நடவடிக்கைகளை எடுக்கலாம். கல்வியாளர்களுக்கு பயனுள்ள அறிவுறுத்தல் உத்திகளை வடிவமைத்து உருவாக்கவும் இது உதவும். மாணவர் தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலம், மாணவர்கள் படிக்க சிரமப்படும் பாடப் பகுதிகளை ஆசிரியர்கள் கண்டறிந்து, அவர்களின் கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க முடியும். இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும்.
அவுட்சோர்சிங் விட முடிவு
இப்படி பல வகையிலும் பயனளிக்கக் கூடிய இந்த கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் தரவுகளைப் பதிவேற்றம் செய்யும் டேட்டா என்ட்ரி பணியை, ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், ஆசிரியர்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படுவதாகவும், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணி பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த பணிகளை மேற்கொள்ள அவுட்சோர்சிங் முறையில் தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், ஆசிரியர்களின் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், “8,500 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு இதற்கான கல்வியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அதேபோல், 6,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இனிமேல் இந்த கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS) பணியை மேற்கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.
“இந்த உதவியாளர்களுக்கு இரண்டிலிருந்து மூன்று பள்ளிகள் வரை ஒதுக்கப்படும், அதில் ஆரம்பப் பள்ளிகளும் அடங்கும். மேலும் அவர்கள் பள்ளியின் EMIS பணியை மேற்கொள்வார்கள். வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்த உதவியாளர்கள் தங்களது பணியைத் தொடங்குவார்கள்.
ஆசிரியர்களுக்காக வாட்ஸ்அப் சேனல்
இதற்கிடையே, ஆசிரியர்களுக்கும் கல்வித் துறைக்கும் இடையே எளிதான தகவல் தொடர்புக்காக வாட்ஸ்அப் சேனல் ஒன்றை உருவாக்கவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு உதவிடும் வகையில், EMIS இணையதளத்தில் உள்ள 1.6 கோடி தொலைபேசி எண்களை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்கள் சரிபார்க்கப்படாததால், 40% அழைப்புகளை மட்டுமே சரியான எண்களுடன் தொடர்புகொள்ள முடிகிறது. இதனால், உயர்கல்வி தொடர்பான விவரங்களைத் தொடர்ந்து பெறுவது கல்வித் துறைக்கு கடினமாக இருந்தது. “இதைச் சரிசெய்ய, இப்போது ஓடிபி ( OTP) வழங்கப்படுகிறது. இதன் மூலம் தொலைபேசி எண்களை சரிபார்க்க முடியும். இதுவரை 5 லட்சம் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன” என குமரகுருபரன் மேலும் தெரிவித்தார்.
இதன்மூலம், மாணவர்கள் பள்ளிக்கு வந்திருக்கிறாரா இல்லையா என்பது குறித்த தகவலை பள்ளியின் தலைமையாசிரியர்கள், பெற்றோருடன் எளிதாக தெரிவிக்க முடியும். மேலும் புத்தகங்கள் விநியோகம் போன்ற தகவல்களை சுற்றறிக்கைகளாக அனுப்பவும் இது உதவிகரமாக இருக்கும் என்பதால், பள்ளிக்கும் பெற்றோருக்கும் இடையேயான தொடர்பு மேலும் அதிகரிக்கும். இதனால், மாணவனின் வருகை, கல்வித் திறன் போன்ற விவரங்களை பெற்றோர் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.