Amazing Tamilnadu – Tamil News Updates

“இப்போ அரசியலுக்கு வரல; ஆனா…” – பொடி வைக்கும் நடிகர் விஷால்!

டிகர் விஜயைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் தடதடத்த நிலையில், அது குறித்த விளக்க அறிக்கை ஒன்றை விஷால் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என பெயர் மாற்றம் செய்து, தனது ரசிகர்கள் மூலம் அவ்வப்போது நல உதவிகளைச் செய்து வந்தார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டிய அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தர்லில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்பு மனுவில் தவறு இருப்பதாக கூறி, அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இருப்பினும், தொடர்ந்து அவர் அரசியலில் ஆர்வம் காட்டி வந்த நிலையில், நடிகர் விஜய் கடந்த வாரம் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக கடந்த இரு தினங்களாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன்’

“இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்ற நோக்கத்தில், நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம். அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக ‘மக்கள் நல இயக்கத்தை’ உருவாக்க மாவட்டம், தொகுதி, கிளைவாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் “தேவி அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில், வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறோம்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி, என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துகொண்டே தான் இருப்பேன். ‘அது என்னோட கடமை’ என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது, மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், விஷாலின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ‘வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால்…’ என்ற வரி நடிகர் ரஜினிகாந்த் கடந்த காலங்களில் விடுத்த அறிக்கையை நினைவூட்டதாக உள்ளது என்றும், தனது படம் வெளியாகும் முன்னர் பப்ளிசிட்டிக்காக அவர் செய்வது போன்றே, வருகிற ஏப்ரலில் ரிலீஸாக உள்ள தனது ‘ரத்னம்’ படத்துக்கான பப்ளிசிட்டியாக விஷால் இவ்வாறு ஸ்டன்ட் அடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

Exit mobile version