இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண் ஊழியர்களின் எண்ணிக்கையில், தமிழ்நாடு அதிக பெண் ஊழியர்களைக் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இந்திய அளவில் தொழிற்சாலைகளில் 15 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் வேலை செய்வதாகவும், இவர்களில் சுமார் 43 சதவீதம் பேர், அதாவது 6 லட்சத்து 79 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம், பெண்கள் தைரியமாகவும், மன உறுதியுடனும் இருப்பதும், அவர்கள் வேலைக்குச் செல்வதற்கு குடும்பத்தினரும் உறுதுணையாக இருப்பதும்தான் முக்கிய காரணம்” என்கிறார்கள் தொழிற்சாலைகளில் மேலாளர்களாகவும் கண்காணிப்பாளர்களாகவும் பணிபுரியும் சில பெண்கள்.
முன்னோடி டைட்டன்
பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் ஆரம்பகால டிரெண்ட்செட்டர்களாக செயல்பட்ட ஒரு சில நிறுவனங்களில் மிக முக்கியமானது டைட்டன் கம்பெனி லிமிடெட் ஆகும். இந்த நிறுவனம், இது தமிழக அரசும் டாடா குழுமமும் இணைந்து, 1980 களின் பிற்பகுதியில் நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்படுவதற்கு முந்தைய அன்றைய காலகட்டத்தில், பெண்களை பணியிடத்தில் ஒருங்கிணைப்பது ஒரு கடினமான பணியாக இருந்தது. கலாசாரத் தடைகள், இளவயது திருமணங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் போன்றவை தடையாக இருந்த நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தமிழகமும் தமிழ்நாட்டு பெண்களும் மெல்ல மெல்ல தங்களை மாற்றிக்கொண்டனர் என்றே சொல்லலாம்.
தமிழகத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஓலாவின் பியூச்சர் தொழிற்சாலையில் மட்டும் சுமார் 3,000 பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இன்ஜினியரிங் டிப்ளமோ மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள். “இவர்களெல்லாம் படிப்பு முடிந்த உடனேயே நேராக கல்லூரியிலிருந்து இங்கே வந்தவர்கள். அவர்களின் வயது சராசரியாக 22 முதல் 24க்குள் தான் இருக்கும்” என்கிறார் இந்த நிறுவன அதிகாரி ஒருவர்.
பெண்கள் அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், திறமை, கற்றலில் சுறுசுறுப்பு ஆகிய தன்மையுடன் இருப்பதாகவும், இதனால் சிறந்த தரமான உற்பத்தியை அவர்களால் கொடுக்க முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.
முதலிடத்துக்கு காரணம் என்ன?
மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், மகப்பேறு விடுமுறையை 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தியது, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்குதல் போன்ற முதலமைச்சரின் நடவடிக்கைகளும் பெண்களின் இந்த பங்களிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறுகிறார் தனியார் நிறுவனத்தின் CEO ஒருவர்.
இது தவிர பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து, மலிவு விலையில் தமிழ்நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகள், நல்ல கல்வி வசதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள், பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவைதான் தமிழக பெண்களைச் சொந்த காலில் நிற்க வைத்து, நாட்டிலேயே அதிக பெண் ஊழியர்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது எனலாம்!