தமிழ்நாட்டில் கோடை வெயிலால் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிக்கும் நிலையில், அடுத்த 4 தினங்களுக்கு இயல்பை விட 3 முதல் 5 டிகிரி
செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப நிலை 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதலே கடுமை காட்ட தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், இப்போதே இயல்பை விட 4 அல்லது 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர்,திருச்சி, கரூர், மதுரை, திருப்பத்தூர் கோவை, நாமக்கல் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் சுட்டெரித்ததாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 4 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப நிலை 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனக் கூறியுள்ளது. மேலும், ‘வெப்ப அலை வீசக்கூடும்’ என மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதனால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ள மருத்துவர்கள், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவசியம் வெளியே செல்ல நேரிட்டால் கையில் குடிநீர் பாட்டிலையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
வெப்ப நிலை அதிகரிப்பால் பொதுமக்களின், குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால், வெப்பச் சோர்வு மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட வெப்பம் தொடர்பான பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் எப்போது?
இதனிடையே அக்னி நட்சத்திரம் மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வெயிலின் உக்கிரம் தற்போது இருப்பதை விட இன்னும் அதிகரிக்கும் என்பதால் வரும் நாட்களில் வெப்ப அலை மேலும் அதிகம் வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு சில மாவட்டங்களில் தற்போ துள்ள வெப்ப நிலை நீடிக்கும்.
கோடை மழை
அதே சமயம், கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இலேசான மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக கன்னியாகுமரி, சேலம், ஏற்காடு பகுதிகளில் கோடை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும். காவிரி டெல்டா பகுதிகள் உள்பட வடதமிழகம், தென் தமிழக பகுதியிலும் அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.