அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முதலமைச்சர் ஆலோசனை
இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று தலைமை செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த பிரச்னையில் கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் என்ன?
இதனைத் தொடர்ந்து கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி.துண்டு,தொப்பி அணிந்துகொள்ள வேண்டும்.பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
தமிழ்நாட்டிலுள்ள 2000-த்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூகநல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனைகள் ஆகியவை வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளும் இங்கு கையிருப்பில் உள்ளன. வெப்ப அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திட களப்பணியாளர்கள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டும், ஒளிப்படக் காட்சிகள் மூலமாக விளக்கப்பட்டும் வருகிறது.
தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் இயங்கிவரும் 299 பேருந்து நிலையங்கள், 68 சந்தைகள், 338 சாலையோரங்கள்மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய 277 இடங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 56 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம்” எனக் கூறியுள்ளார்.