Amazing Tamilnadu – Tamil News Updates

‘அனிமேஷன், கேமிங்…’ – அண்ணா பல்கலைக் கழகத்தின் அசத்தல் கோர்ஸ்கள்!

மிழ்நாட்டின் உயர் கல்வித் துறையை மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகளை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.

இதுவரை அனிமேஷன் மற்றும் கேமிங் போன்ற உடனடி வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளுக்கு, பெரும்பாலும் தன்னாட்சிக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களையே மாணவர்கள் சார்ந்திருக்கும் சூழல் நிலவி வந்தது. மேலும், இப்படிப்புகளில் ஆர்வம் இருந்தாலும், அதிக கட்டணம் மற்றும் குறைவான இடங்கள் போன்றவற்றினால் எளிமையான குடும்ப பின்னணி கொண்ட மாணவர்களுக்கு அப்படிப்புக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்த நிலையில், அந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகமே இத்தகைய புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த தொடங்கி உள்ளது.

இதன்படி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் (AU) கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் அனிமேஷன் மற்றும் கேமிங் படிப்புகளை வழங்க தயாராகி வருகின்றன. உலகளவில் தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை கண்டு வரும் இந்த துறைகளில், தொழில் வல்லுநர்களுக்கான தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே அண்ணா பல்கலைக்கழகம் இந்த முன் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இப்போது வரை, அனிமேஷன் மற்றும் கேமிங்கில் உள்ள படிப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் 3.5 லட்சம் வரை செலுத்தும் நிலைமையே காணப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மாணவர்களால் இப்படிப்புகளில் சேர முடியாத நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை எளிய பிரிவு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல், பி.டெக் கேமிங் மற்றும் அனிமேஷன் படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். இந்த படிப்புகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறையின் கீழ் வரும். பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் கூட தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக இவற்றைக் கற்றுக்கொள்ளலாம் என்கின்றன உயர் கல்வித் துறை வட்டாரங்கள்.

இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நான் முதல்வன் திட்ட’த்தின் கீழ் இளநிலை தொழிற்கல்வி (Bachelor of Vocational Degree) என்ற 3 ஆண்டு படிப்புகள் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டன. முதல்கட்டமாக ஆரணியில் உள்ள அண்ணாபல்கலை. உறுப்புக் கல்லூரியில் காலணி உற்பத்தி (Footware Manufacturing) மற்றும் காஞ்சிபுரம் உறுப்புக் கல்லுரியில் சரக்கு மேலாண்மை (Logistics Management) படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்விரு படிப்புகளில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்கள் சார்ந்து இத்தகைய படிப்புகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த படிப்புகள் குறித்த கூடுதல் தகவல்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://www.annauniv.edu/) தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

உயர் கல்வித் துறையில் எப்போதும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும் தமிழகம், அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய படிப்புகள் மூலம் இளைஞர்களின் படைப்புத் திறன்களை வளர்ப்பதற்கும், இந்தத் தொழில் வாய்ப்புகளில் அவர்களைத் தயார்படுத்துவதற்குமான வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது எனலாம்!

Exit mobile version