Amazing Tamilnadu – Tamil News Updates

அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு ‘கூட்டு மதிப்பு நடைமுறை’யால் நன்மைகள், சலுகைகள் என்ன?

டுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது தவறானது எனக் கூறியுள்ள தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை, இந்த புதிய நடைமுறையால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் சலுகைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பு வரை, அடுக்குமாடி குடியிருப்புகளின் பிரிக்கப்படாத அடிமனை பாகம் மட்டும் தனி கிரைய ஆவணமாகவும், கட்டுமான உடன்படிக்கை தனி ஆவணமாகவும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

முழு உரிமை இல்லாமல் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகள்

இத்தகைய இரட்டைப் பதிவின் காரணமாக கட்டிடத்தைப் பொறுத்து அதனை வாங்குபவர்களுக்கு முழுமையாக சட்டப்பூர்வ உரிமை கிடைக்கப் பெறுவதில்லை. மேலும், கூட்டு மதிப்பு நடைமுறை அமலுக்கு வந்த டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன், பதிவான பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டிடங்களைப் பொறுத்தவரை அவை விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யப்படவில்லை. இதனால் கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கியிருந்தாலும், கட்டிடங்களைப் பொறுத்து சட்டப்பூர்வமான முழுமையான உரிமை, வாங்கியவர்களுக்கு இல்லாமலேயே இருந்து வந்தது.

கட்டுமான உடன்படிக்கை ஆவணத்தை மட்டும் முன் ஆவணமாகக் கொண்டு, அந்த அடுக்குமாடி குடியிருப்பை மறுகிரையம் செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு பதிவுத்துறையில் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், இதனை சாதகமாக்கிக் கொண்டு அரசுக்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்தைக் குறைத்து செலுத்தும் நோக்கில், கட்டிடத்துக்கு கிரைய ஆவணம் செய்யப்படாமல், கட்டுமான உடன்படிக்கை ஆவணமாகவே கட்டுமான நிறுவனத்தினரால் பதிவு செய்யப்பட்டு வந்ததாக புகார் கூறப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்து, கூட்டு மதிப்பு நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

கூட்டு மதிப்பு நடைமுறை அமல்

இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள கூட்டு மதிப்பு நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழக பதிவுத் துறைக்கு முன் வைக்கப்பட்டது. இதனையடுத்தே பிரிக்கப்படாத பாக அடிமனை மற்றும் கட்டிடத்துக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே கிரைய ஆவணமாகவே பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை 2023 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இந்த புதிய நடைமுறையால் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் பாதிக்கப்படுவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், உண்மையில் இந்த நடைமுறையால், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோருக்கு பிரிக்கப்படாத பாக அடிமனை மற்றும் கட்டிடம் இரண்டின் மீதும் சட்டப்பூர்வ உரிமைகிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு கிடைத்த சலுகைகள்

“மேலும், கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே கிரைய ஆவணமாகப் பதிவு செய்யும் நடைமுறை 01.12.2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்டபோது புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரூ.50 லட்சம் வரையிலான மதிப்புடைய முதல் விற்பனைக்குரிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் விற்பனைக் கிரைய ஆவணம் பதியும்போது நடைமுறையில் உள்ள 9%-க்குப் பதிலாக முத்திரைத் தீர்வை 4% மற்றும் பதிவுக் கட்டணம் 2% ஆக மொத்தம் 6% செலுத்தினால் போதுமானது எனவும்,

ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான மதிப்புடைய முதல் விற்பனைக்குரிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் முத்திரைத் தீர்வை 5% மற்றும் பதிவுக் கட்டணம் 2% ஆக மொத்தம் 7% செலுத்தினால் போதுமானது எனவும் அரசால் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நடுத்தர மக்கள், இச்சலுகைகளுடனான கூட்டு மதிப்பின் அடிப்படையில் சட்டபூர்வமாக தங்களது பெயரில் அடுக்குமாடி குடியிருப்பினைப் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட 01.12.2023 தேதி முதல் 13.02.2024 வரை சலுகையுடனான கூட்டு மதிப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மொத்தம் 1988 கட்டுமான குடியிருப்பு விக்கிரைய ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவுக்கட்டணங்களைப் பொறுத்தமட்டில், நமது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படும் வழிகாட்டி மதிப்பும் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களும் மிகக் குறைவானதே” என அவர் மேலும் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version