நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், “வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரி செய்ய முடியாது” என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது பாஜக-வுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து எழுதிய “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024: இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன்கள்” என்ற தலைப்பிலான அறிக்கை வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், “வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரி செய்ய முடியாது. அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள்தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது” எனக் கூறினார்.
வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு நிகழ்வில் அவர் இவ்வாறு முரண்பாடான கருத்தை தெரிவித்தது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இது குறித்த செய்தி வெளியானதும் அவரது இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. கூடவே இது நாடு தழுவிய அளவில் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது.
‘அரசின் கையாலாகாத்தனம்’
இந்த நிலையில், அனந்த நாகேஸ்வரனின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், “வேலையில்லா பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்ற அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையையே காட்டுகிறது.
பாஜக அரசால் இயலாது என்றால் ‘நாற்காலியைக் காலி செய்’ என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும். வேலையில்லாமை பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
‘பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம்’
அதேபோன்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “சிறு குறு தொழில் முனைவோருக்குப் பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலை வாய்ப்பின்மையை எப்போதுமே சரி செய்ய முடியாது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மோடியின் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை என்னவாயிற்று?
இந்த நிலையில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், 2013 ஆம் ஆண்டு ஆக்ராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அளித்த வாக்குறுதியை தற்போது நினைவூட்டி, நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் 25 முதல் 29 வயது இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 15.5 சதவீதத்தை எட்டி உள்ளதாகவும், இது நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்திருந்தது.
இதன் அர்த்தம், வேலையின்மை இப்போது கொரோனா தொற்றின் போது இருந்ததை விட மோசமாக உள்ளது. 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 45.5% ஆக உயர்ந்துள்ளது. 30 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களுக்கு கூட வேலையின்மை விகிதம் மூன்று ஆண்டுகளில் மிக அதிகமாக உள்ளது.
கிராமப்புறங்களில் நெருக்கடி அதிகமாகி வேறு வேலைகள் கிடைக்காததால், பல குடும்பங்கள் நூறு நாள் வேலை திட்டத்துக்கு செல்கின்றனர் என அம்மையம் மேலும் தெரிவித்திருந்தது. இத்தகைய சூழ்நிலையில், வேலையில்லா திண்டாட்டத்தை தங்களாலும் சரி செய்ய முடியாது என மோடி அரசு கை விரித்திருப்பது நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில், இந்த விவகாரம் தங்களுக்கு எதிராக திரும்புமோ என பாஜக வட்டாரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.