‘மக்களுடன் முதல்வர்’… தெருவுக்கே தேடி வரும் அரசு சேவைகள்!

‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கி வைத்த நிலையில், இந்த திட்டத்தினால் அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் பொதுமக்களின் குடியிருக்கும் தெருக்களுக்கே தேடிச் சென்றடைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு, நிர்வாகத்திலும் வெளிப்படைத் தன்மை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதற்கு முன்னர், பல மாதங்களாக மாநிலம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மு.க. ஸ்டாலின். அப்போது மேடையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்று எழுதப்பட்ட பெட்டியை வைத்து , அதன் மூலம் மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். ஆட்சிக்கு வந்தவுடன், அந்த மனுக்களுக்குத் தீர்வு காண, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற துறையை உருவாக்கி, அனைத்து மனுக்களுக்கும் 100 நாட்களில் தீர்வு காணும் திட்டத்தைச் செயல்படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த திட்டத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைகளைத் திறம்பட கையாண்டு, அவற்றை நிறைவேற்றிட ஏதுவாக, ‘முதல்வரின் முகவரித் துறை’ என்ற தனித்துறையை உருவாக்க ஆணையிட்டார். இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதோடு, தமிழக முதல்வர், நேரடியாக மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற முன்னெடுப்பின் கீழ், மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, கள ஆய்வுகள் மேற்கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் பொது மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

கோவையில் தொடங்கப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்

இந்த முன்னெடுப்பின் நீட்சியாக தான் தற்போது ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவில், இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களைப் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

இந்த திட்டத்தின் மூலம், தொடர்ந்து அங்கு வரக்கூடிய மக்களுக்கு அவர்களது புகார் மனுக்கள், தேவைகள், குறைகளை கேட்டறிந்து ஆவணங்களைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளை அதிகாரிகள் கூறினர். இவ்வாறாக பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் சிறப்பு என்ன?

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

முதற்கட்டமாக இன்று முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1,745 முகாம்கள் நடத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்திலிருந்து ஜனவரி 31 வரை “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அரசு சேவைகள் இனி தெருவுக்கே தேடிவரும்

இந்த சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இனி பொதுமக்கள் அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கும், நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும், சான்றிதழ்கள் பெறுவதற்கும் அலைந்து திரியாமல், தங்களது தெருவிலேயே இதற்கான சேவைகளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tägliche yachten und boote. Hest blå tunge. Here is a sneak peek at  tomorrow night’s masterchef junior on fox.