Amazing Tamilnadu – Tamil News Updates

மகளிரின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி… மகத்தான பயனளிக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம்!

ற்போது மாறி வரும் சமூக, பொருளாதார சூழலில்,பெண்கள் உயா்கல்வி பெறுவதற்கும், குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும், சுயதொழில் புரிவதற்கும் போக்குவரத்து தேவை இன்றியமையாதது ஆகும். தமிழகத்தில் பணிபுரியும் ஆண்களின் விகிதத்தைக் கணக்கில் கொள்ளும்போது, பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பணிகளில் பெண்களின் பங்களிப்பு 31.8 சதவீதமாகவும், ஆண்களின் பங்களிப்பு 59.3 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பொருளாதார வளா்ச்சிக்குப் பெண்களும் சிறப்பான பங்களிப்பை நல்க இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பணிகளில் பெண்களின் பங்களிப்பு சதவீதத்தை உயா்த்த வேண்டியது அவசியமாகிறது. உயா்கல்வி கற்பதற்காகவும், பணிநிமித்தமாகவும், பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொடுப்பதும், பொதுப் போக்குவரத்துப் பயணங்களை ஊக்குவிப்பதும், பெண்களின் சமூகப் பொருளாதாரத் தேவைக்கு உகந்ததாக அமையும்.

மகளிருக்கு இலவச பயணத் திட்டம்

இதனை கருத்தில்கொண்டுதான், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதும், 5 மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாகவும் கையெழுத்திட்ட ஐந்து உத்தரவுகளில் ஒன்றாக சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்பது.

இந்த திட்டம், உடனடியாக நடைமுறைக்கு வந்த நிலையில், மக்களிடையே இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்லூரி மாணவிகள், படிக்க நினைக்கும் மகளிர், சமூக அறிவைப் பெற நினைக்கும் பெண்களுக்கு, வீட்டில் இருந்தபடியே சிறு குறு தொழில் செய்யும் இல்லத்தரசிகளுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக அமைந்ததால் தான், இம்மாதம் மே 9 ஆம் தேதிவரை இத்திட்டத்தின் கீழ் பெண்களால் 468 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெண்களின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி

இந்த திட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 55 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு 49 லட்சம் பேர் பயணம் செய்தனர். ஒட்டு மொத்தமாக கடந்த மே 9 ஆம் தேதி வரை, 468 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும், கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் உச்சபட்சமாக ஒரு நாளில் 176 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநில திட்டக்குழு அதிகாரிகள் கூறுகையில், “மாநில திட்டக்குழுவின் ஆரம்ப தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள், இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு குறிப்பாக உதவியதாகவும், அதில் கிடைக்கும் சேமிப்புகள் சில்லரை பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்க உதவுவதாகவும் காட்டியது.

விடியல் பயணம், சமூக அமைப்பில் பெண்களின் அந்தஸ்தை உயர்த்துவதுடன், தமிழகத்தில் பணிபுரியும் பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கிறது. 60 சதவீத பெண்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று திட்டக்குழு கண்டறிந்துள்ளது. இது இளம் பெண்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதை காட்டுகிறது. மேலும் 80 சதவீத பயணிகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த திட்டம் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கு பெரிதும் பயனளிக்கிறது” எனத் தெரிவித்தனர்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியையும் கொண்டே கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், இந்த திட்டம் பெண்களுக்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றுதான்!

Exit mobile version