Amazing Tamilnadu – Tamil News Updates

நாடாளுமன்ற தேர்தல் 2024: வாக்களிக்க வழிகாட்டும் வாக்காளர் கையேடு… வேட்பாளர்கள் தகுதியைச் சொல்லும் KYC

ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ‘100 சதவீத வாக்குப்பதிவு’ என்ற இலக்கை அடையும் வகையில், அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு, 12 D எனும் விண்ணப்பத்தை வழங்கும் பணியினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

வாக்காளர் கையேடு

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைனில் எப்படி தேடுவது, தங்களுக்கான வாக்குச் சாவடி எங்கு உள்ளது, வாக்களர் அடையாள அட்டை இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது உட்பட வாக்காளர்களுக்குத் தேவையான விவரங்களைத் தெரிவிக்கும் வழிகாட்டியாக, வாக்காளர் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, ‘வாக்காளர் கையேடு’ என்ற 8 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகத்தை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது.

இந்த கையேடு, பூத் சிலிப் வழங்கும்போதோ அல்லது தனியாகவோ, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வீடுவீடாக வழங்கப்படும். அந்த புத்தகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறை ; அதற்கான விண்ணப்பப் படிவங்களின் விவரங்கள்; வாக்காளர் பட்டியலில் பெயரை ஆன்லைனில் தேடும் முறை; வாக்குச்சாவடி இருக்கும் இடத்தை அறியும் முறை; வாக்களர் அடையாள அட்டை இல்லாவிட்டால் மாற்று ஆவணங்கள் பற்றிய விவரங்கள்;

வரிசையில் நிற்பதில் இருந்து ஓட்டுப் போடுவது வரை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்; ஓட்டுப் போடும்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் கவனிக்க வேண்டியவை ; தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ள வழிகாட்டி சேவை செயலிகள் பற்றிய விவரங்கள்; வீட்டில் இருந்தே வாக்களிக்கும் தபால் ஓட்டு வசதி; உறுதியாக வாக்களிப்பேன் என்ற உறுதிமொழி போன்ற தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

வேட்பாளர்கள் தகுதியைச் சொல்லும் KYC

அதுமட்டுமல்லாது, வாக்காளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள், குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா, அப்படி இருந்தால் அவற்றின் தற்போதைய நிலை என்ன, சொத்து விவரங்கள் என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில், தேர்தல் ஆணையத்தின் சார்பில், வேட்பாளர்களை அறிந்து கொள்ளுங்கள் (KYC) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் படித்துப் பார்த்து, வேட்பாளர்களின் தகுதியை சீர்தூக்கிப் பார்த்து யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை வாக்காளர்கள் முடிவு செய்யலாம்.

Exit mobile version