Amazing Tamilnadu – Tamil News Updates

‘திமுக-வும் பிரதமர் பதவியும்’- மு.க. ஸ்டாலின் சிறப்பு பேட்டி!

‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், The Indian Express ஆங்கில நாளேடுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் இடம்பெற்ற முக்கியமான அம்சங்கள் இங்கே…

கடந்த காலங்களில் நீங்கள் பல நாடாளுமன்ற தேர்தல்களைப் பார்த்திருப்பீர்கள். தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிரான கூட்டணியை வழிநடத்தும் நீங்கள் இந்த தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாம் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தின் மத்தியில் இருப்பது போன்ற உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. இந்தியாவின் ஆன்மாவான ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் நமது பன்மைத்துவ சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. பாசிச சக்திகள் என்று நான் வெளிப்படையாகச் சொல்வதில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவதற்காக திமுகவும், இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் இணைந்து இந்த ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

திமுக-வின் இளைஞர் அணியை நான் முன்னின்று நடத்தும் போது, எனது கட்சி சகாக்களிடம், ‘செய்து முடி… இல்லையேல் அதற்கான முயற்சியில் செத்துப் போ’ என்று கூறுவேன். மேலும், நாம் நினைத்ததை சாதிக்கப் போகிறோம் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தத் தேர்தல் நமக்கு ஒரு முக்கியமான தருணம் மட்டுமல்ல; இது இந்திய ஜனநாயகத்துக்கான’ செய் அல்லது செத்து மடியும்’ போராட்டம். ஆனால், எங்களிடம் வலுவான அணி உள்ளது. அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் அனைவரும் எங்களுடன் இருக்கிறார்கள். இந்த தருணத்தின் தீவிரத்தை உணர்ந்து இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல உங்கள் அரசு ஏன் முடிவு செய்தது? இது சாத்தியமான நடவடிக்கையா?

நாங்கள் அதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2023 டிசம்பரில் கனமழை மற்றும் புயலால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருந்த போது… நான் தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து, இதை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் என்ன நடந்தது? மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியுதவியும் வரவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்பத்துக்கு தலா ரூ.6,000 வழங்கினோம். இத்தகைய பேரிடர்களின் போது கூட மத்திய அரசு கண்மூடித்தனமாக இருக்கும் போது, நியாயமான நிதியுதவியையோ அல்லது வரி வருவாயில் ஒரு கண்ணியமான வரிப் பகிர்வையோ நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

எனவே, நாங்கள் எங்கள் போராட்டத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றோம். நிதி உதவி என்பது ஒரு உதவி அல்ல; அது சட்டப்பூர்வமான நமது உரிமை. இப்போது, இவை அனைத்தும் நிர்வாக விஷயங்கள் (தேசிய பேரிடர் போன்றவை) என்று நீங்கள் கூறலாம். ஆனால் இந்த நிர்வாகப் பிரச்னைகள் என்று சொல்லப்படுவதைத் தீர்ப்பதற்காக மோடி அரசு கடைசியாக முதலமைச்சர்களின் கூட்டத்தை எப்போது கூட்டியது? அவர்கள் (பாஜக) துடிப்பான ஜனநாயகம் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி பற்றி பேச விரும்புகிறார்கள். ஆனால் அது உண்மையில் எங்கே இருக்கிறது? நடைமுறையில் இல்லாமல்தான் இருக்கிறது.

என்னை நம்புங்கள், இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. மத்திய அரசின் நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடத்தை காரணமாக நாங்கள் அவ்வாறு செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது.

ஒருசில மத்திய அமைச்சர் பதவிகளைத் தாண்டி, தேசிய அளவில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று திமுக எப்போதாவது யோசித்திருக்கிறதா?

இந்திய அரசியலில் திமுக-வின் பங்கு என்பது, மத்திய அரசில் சில அமைச்சர் பதவிகளைப் பெறுவதில் மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது செல்வாக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது… குறிப்பாக கலைஞரின் தலைமையில். வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்து, தேசியத் தலைமையை உருவாக்குவதில் திமுக முக்கியப் பங்காற்றியுள்ளது.

1971ல் இந்திரா காந்தியின் கீழ் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை ஆதரித்தது போல், 1975ல் எமர்ஜென்சிக்கு எதிராக உறுதியாக நின்றது, 1977ல் ஜனதா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தது, 1989 ல் தேசிய முன்னணியை அமைத்தது, 1996 ல் ஐக்கிய முன்னணி போன்ற தேச நலனுக்கான எங்கள் அர்ப்பணிப்பு எப்போதும் இருந்து வருகிறது. 1999 ல் வாஜ்பாய் அரசாங்கத்தை, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் கீழ் நாங்கள் ஆதரித்தோம், 2004 ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (UPA) அமைப்பதில் முக்கிய சக்தியாக இருந்தோம்.

ஆனால், திமுக ஒருபோதும் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு ஆசைப்பட்டதில்லையா?

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகள் கூட கலைஞரின் கைக்குள் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ‘என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று அடக்கமாகச் சொன்னார். ஆனால், இந்திய அரசியல் சூழலில், கலைஞரும் திமுகவும் இமயமலை போன்ற உயர்ந்த ஆளுமைகள். எங்களைப் பொறுத்தவரை அதிகாரம் அல்லது பதவிகள் மட்டுமல்ல; கூட்டாட்சி, மதச்சார்பின்மை, வெறுப்பு இல்லாத இந்தியாவை வளர்ப்பது, பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது மற்றும் அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதையை உறுதி செய்வது போன்ற கொள்கைகளை உறுதியாக நிலைநிறுத்துவதும்தான் எங்கள் கொள்கை.

கட்சிகளை ஒரு சித்தாந்தம் இல்லாதவர்களாகக் கருதுவதால், மக்கள் இப்போது வலுவான தலைவர்களின் பக்கம் அதிகம் சாய்ந்துள்ளனர் எனச் சொல்லப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தலைமுறைகள் மாறும்போது அரசியல் சித்தாந்தங்கள் உருவாகின்றன. மேலும், இந்த புதிய தலைமுறையினரை கருத்தியல் அர்ப்பணிப்பின் மூலம் அரசியலில் ஈடுபடுத்துவது ஒரு தலைவருக்கான முக்கியமான அம்சம். பெரியார், அண்ணா, கலைஞர் காலத்திலிருந்து இன்று வரை திராவிட இயக்கம் இந்தப் பாதையில் பீடு நடை போட்டுவது இதற்கான ஒரு சிறந்த உதாரணம். காலம் மாறுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகள் மற்றும் மொழியின் மீதான ஆழ்ந்த பற்று போன்ற நமது முக்கிய விழுமியங்கள் அப்படியேதான் உள்ளன.

மறுபுறம் பாஜக வித்தியாசமான ஆட்டத்தை ஆடுகிறது. அவர்கள் மத உணர்வுகளைத் தூண்டி, வெறுப்புணர்வை வளர்த்து, அரசியலில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைப் புகுத்துகிறார்கள். இன்றைக்கு மோடியை அவர்கள் முன்னோடியாகக் கொண்டுள்ளனர். இது நேற்று வேறொருவர், நாளை மற்றொரு முகமாக இருக்கும்… முக்கியமாக, பிஜேபியின் வியூகம், இப்போதைய பிரதமரை விட பெரிய ஆளுமையை வடிவமைப்பதில்தான் உள்ளது.

ஆனால் பா.ஜ.க.வின் வெற்றி மோடியின் ‘ஒற்றை, ஒருங்கிணைக்கும் தலைவர்’ பிம்பத்துடன் பிணைந்துள்ளதா அல்லது இந்துத்துவா உடனா?

அவர்கள் மோடியை ‘விஷ்வ குரு’ என்று வர்ணிக்கலாம், ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீதான அலட்சியப் போக்கையோ, சீனாவுடனான எல்லையில் நடக்கும் மோதலையோ பார்க்கும்போது, அவரது மௌனம் ஏராளமானவற்றைப் பறைசாற்றுகிறது. அவர் ‘விஷ்வ குரு’ அல்ல. வரும் தேர்தலில், ராகுல் காந்தி போன்ற ஒரு ஆற்றல்மிக்க இளம் தலைவர், மோடியின் அந்த வளர்க்கப்பட்ட பிம்பத்தையும், ஆர்.எஸ்.எஸ் கதையையும் தகர்க்கப் போகிறார்.

2019 முதல் தமிழகத்தில் ஒரு வெற்றிகரமான கூட்டணியைத் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் உங்கள் பங்கு என்ன?

2018 ல் நாங்கள் எங்கள் கூட்டணியை மீண்டும் ஒன்றிணைத்தபோது, இது அரசியல் வசதிக்காக மட்டுமானது அல்ல என்பதை நான் தெளிவுபடுத்தினேன்; அது பகிரப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டணி. பாசிச சக்திகள் என்று நான் அழைக்கும் சக்திகளிடமிருந்து இந்திய ஜனநாயகம் மற்றும் நமது சட்டக் கட்டமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை திரும்பப் பெறுவதே எங்கள் கூட்டணியின் முக்கிய நோக்கமாகும். இந்த பகிரப்பட்ட பார்வைதான் 2019 முதல் எங்களை ஒற்றுமையாகவும் ஆக்கபூர்வமானதாகவும் வைத்திருக்கிறது.

உங்களையும் உங்கள் ஆட்சியையும் மக்கள் எப்படி நினைவில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

பொது வாழ்க்கையில், விமர்சனங்களை எதிர்கொள்வது அதன் ஒரு அங்கம்தான். நான் உட்பட திராவிட இயக்கத் தலைவர்கள், கடினமான காலங்களில் எங்களின் நியாயமான பங்களிப்பைப் பார்த்திருக்கிறோம். நான் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன்; சில சமயங்களில் அவை மிகவும் கடுமையானதாகவும் இருந்திருக்கிறது. ஆனால், எனது வேலையைத் தொடர்வது, நான் உண்மையில் என்ன செய்கிறேன் என்பதை எனது செயல்களின் மூலம் காண்பிப்பது போன்றவை மூலமே அவற்றை எப்பொழுதும் எதிர்கொண்டிருக்கிறேன். நான் திமுக-வை வழிநடத்திச் செல்வது என்பது, திராவிட இயக்கத்தின் விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்து போராடும் புயலைக் கடந்து செல்வது போல் இருந்து வருகிறது. ஆனாலும், நான் என் நிலைப்பாட்டில் உறுதியாகவும் அசையாமலும் நிற்கிறேன்.

திமுக அனுதாபிகள் மட்டுமின்றி மக்கள் இன்னும் உங்களை எப்படி நினைவில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

நான் எந்த பிரமாண்டமான பட்டப்பெயருக்கும் ஆசைப்படவில்லை. ‘மு.க.ஸ்டாலின் உறுதியான முதல்வர், அவர் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியவர்’ என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொண்டால் அதுவே போதுமானது. மேலும், திமுக ஆதரவாளர்களை தனித்தனியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களும் பொதுமக்கள் மற்றும் வாக்குரிமை பெற்றவர்கள் என்றே பார்க்க வேண்டும்.

Exit mobile version