Amazing Tamilnadu – Tamil News Updates

பாஜக ஆட்சி அமைக்க ‘வெயிட்டான’ இலாகாக்களைக் கேட்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்… இந்தியா கூட்டணியின் வியூகம் என்ன?

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக 238 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், ஆட்சியமைக்க தேவையான 272 இடங்கள் அதற்கு இல்லை என்பதால், இந்த முறை கூட்டணி கட்சிகளின் தயவிலேயே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும், சிக்கல் இல்லாமல் ஆட்சியை நடத்திச் செல்ல மாநில கட்சிகளையே மோடி பெரிதும் நம்பி இருக்க வேண்டி உள்ளது. பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் தெலுங்கு தேசம் 16 இடங்களையும் சிவ சேனாவின் ஷிண்டே பிரிவு 7 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களையும் ராஷ்ட்ரிய லோக் தளம் 2 இடங்களையும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. மற்ற சிறிய கட்சிகள் ஆறு இடங்களையும் பெற்றுள்ளன.

ஆட்சியைத் தீர்மானிக்கும் நாயுடு, நிதிஷ்

அந்த வகையில் முக்கியமாக ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சியின் ஆதரவும், பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவும் தேவைப்படுகிறது. இதில் தெலுங்குதேசம் 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் கொண்டுள்ள நிலையில், இன்னொரு புறம் இவ்விரு கட்சிகளின் ஆதரவைப்பெற காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களைக் கைப்பற்றி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 100 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க இன்னும் 40 இடங்கள் தேவை என்பதால், அக்கூட்டணியும் நாயுடுவையும் நிதிஷ் குமாருடனும் பேசி வருகிறது.

வெயிட்டான இலாகாக்களுக்கு பேரம்

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் இந்த முயற்சியை காட்டி தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் பாஜக-விடம் தங்களது பேரத்தை கடுமையாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இரு கட்சிகளுமே அமைச்சரவையில் நிதித் துறை, கல்வி, சாலை போக்குவரத்து, ஊரக வளர்ச்சி துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை, ஜல் ஜக்தி போன்ற வெயிட்டான இலாகாக்களைக் கேட்பதாகவும், இவற்றுடன் சேர்த்து சபாநாயகர் பதவியையும் தர வேண்டும் என்றும் கோருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பீகாருக்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு, நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஐக்கிய ஜனதா தளம் முன்வைப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று சந்திரபாபு நாயுடுவும், ஆந்திராவுக்கென சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகர் பதவிக்கும் கோரிக்கை

அதே சமயம் சபாநாயகர் பதவி கோருவது எதற்கென்றால், கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலையில் கட்சித் தாவல் ஏற்பட்டால் சபாநாயகரின் பங்கு முக்கியமானது என்பதால், சபாநாயகர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தால் நல்லது என இவ்விரு கட்சிகளும் கோருவதாக தெரிகிறது. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் இரு தலைவர்களும் இந்த கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக எழுப்புவார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் சந்திரபாபு நாயுடுவைப் பொறுத்தவரை முக்கியமான பேச்சுவார்த்தை நடத்துவதில் மிகவும் திறமையானவர் என்பதால், பாஜக-விடமிருந்து தனது கட்சிக்கும் தனது மாநிலத்திற்கும் எவ்வளவுக்கு எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு தூரம் கறக்க முயல்வார்.

இந்தியா கூட்டணியை ஆதரிப்பார்களா?

இதற்கிடையே இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும், அது ஸ்திரமற்ற அரசாக இருக்கும் எனக் கருதுகிறார் நாயுடு. அதே சமயம் இந்தியா கூட்டணியைக் காட்டி பாஜக-விடம் அவர் மிக கடினமான பேரம் நடத்துவார் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் நிதிஷ் குமார் எந்த கூட்டணியை ஆதரித்தாலும், அவர் ஒரு நிலையான மன நிலையில் இல்லாதவர் என்பதால், எப்பொழுது வேண்டுமானாலும் நிலைமை மாற வாய்ப்புண்டு.

அதே சமயம், நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி மீது ஒரு கண் உண்டு. அவர் ஏற்கெனவே இந்தியா கூட்டணியில் இடம்பெற்றவர் என்பதாலும், தன்னை பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கவில்லை என்ற கோபத்தில்தான் அவர் அக்கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு மீண்டும் சென்றார் என்றும் ஒரு பேச்சு உண்டு. இந்த நிலையில், இன்று டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க நிதிஷ் குமாரும், இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் அருகருகே பயணித்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து தேஜஸ்வி யாதவிடம், இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க நிதிஷ் குமாரிடம் ஆதரவைப் பெறுவது குறித்துப் பேசினீர்களா எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, “பொறுத்திருந்து பாருங்கள்” எனக் கூறினார். எனவே பாஜக ஆட்சியமைப்பதை தடுக்க நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவியை வழங்க இந்தியா கூட்டணி முன்வந்தாலும், அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேற்று, எங்கள் உத்தியை இப்போதே சொல்லிவிட்டால் பாஜக உஷாராகிவிடும் எனச் சொல்லி இருப்பதால் டெல்லி அரசியலில் அடுத்து வரும் நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது.

Exit mobile version