நாட்டின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 இடங்களுக்கான வாக்குப்பதிவு, நாளை நடைபெறுகிறது.
இதனையொட்டி வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இங்கே…
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33,925 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-3 கோடியே 6 லட்சத்து 5,793, பெண்கள்-3 கோடியே 17 லட்சத்து 19,665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8,467.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் 606 சுயேட்சைகள் உள்பட 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-873 பேர், பெண்கள்-77 பேர்.
தமிழக வாக்காளர்களில் முதல் முறையாக நாளை வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 92,420.
தமிழகம் முழுவதும் 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. மிக மிக பதற்றம் நிறைந்தவை 181 வாக்குச் சாவடிகள்.
பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை நிலை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10,000 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது பணிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் இல்லை. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஆவணங்களை அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
ஓட்டுப்பதிவை முழுமையாக கண்காணிப்பதற்காக 44,800 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அந்த வாக்குச் சாவடிகளின் செயல்பாடுகள் 100 சதவீதம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும்.
அரசு ஊழியர்கள் இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.