தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தல் இம்மாதம் 19 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 609 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு எனப்படும் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று அதிகாரிகள் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி, ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பூத் சிலிப்புடன், வாக்காளர் வழிகாட்டி கையேடும் வீடு வீடாக வழங்கப்பட உள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் மார்ச் 31 வரை ரூ. 109.76 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகம் செய்த ‘சி விஜில்’ செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா?
இதனிடையே, வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விவரங்கள், வாக்குச்சாவடி எங்கு உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையத்தின் ‘ஓட்டர் ஹெல்ப் லைன்’ என்ற பிரத்யேக செயலி நடைமுறையில் உள்ளது. இந்த செயலி மூலம், வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
இந்தச் செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்தல் நாளன்று ஓட்டுப்போடப் போகும் நேரத்தில், மேற்கூறிய விவரங்களைத் தெரிந்துகொள்ள அங்குமிங்கும் அலைந்து பரிதவிப்பதை தவிர்க்க, வாக்காளர்கள் இப்போதே இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து, விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது.
இதனிடையே, வாக்காளர்களின் வசதிகளைக் கருத்தில் கொண்டு மேலும் பல புதிய செயலிகளை அறிமுகப்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.