நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தேர்தலை முன்வைத்து ஆங்கில நாளேடு ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக-வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகவும், இந்த தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நாட்டு மக்கள் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியின் முக்கியமான அம்சங்கள் இங்கே…
‘இந்தியா’ கூட்டணியின் நட்பு கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நீங்கள் முக்கியப் பங்கு வகித்தீர்கள். தெற்கிலிருந்து ஒரு குரல்-இந்தியாவுக்காகப் பேசுதல் என்பதன் நோக்கம், தாக்கம் என்ன?
இந்திய அரசியலில் தெற்கிலிருந்துதான் சமூக நீதியின் குரல் ஓங்கி ஒலித்தது. தெற்கிலிருந்துதான் சமத்துவத்தின் குரல் ஒலித்தது. மதவாத அரசியலுக்கு இடம்தராமல் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான பகுதியாக தெற்கு இருக்கிறது. இந்த உணர்வு கொண்ட பல தலைவர்கள் வடமாநிலங்களில் இருக்கிறார்கள். இருதரப்பின் உணர்வையும் ஒருங்கிணைத்து இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் பாட்காஸ்ட்டில் உரையாற்றினேன். பல மில்லியன் பேரை அது சென்று சேர்ந்து, தேர்தல் களத்திற்கான முன்னோட்டப் பரப்புரையாக அமைந்தது. என்னுடைய தமிழ் உரையை ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, வங்காளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிட்டதால் நல்ல விளைவை ஏற்படுத்தியது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தீர்கள். இந்த முறை அவருக்கு தகுதி இல்லையா? எந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் பிரதமர் வேட்பாளர் முக்கியம் இல்லையா?
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். தற்போது இந்தியா கூட்டணியின் வலிமையும் வெற்றியும்தான் முதன்மையானது என்பதால் அவர் உள்பட கூட்டணியின் அனைத்துத் தலைவர்களுமே பாஜக-வை வீழ்த்தும் வியூகங்களில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர். 1977ல் மொரார்ஜி தேசாயும், 2004 ல் டாக்டர் மன்மோகன்சிங்கும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படாமலேயே அந்தப் பொறுப்புக்கு வரவில்லையா? இந்தத் தேர்தல் என்பது யார் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்பதைவிட யார் பிரதமராகத் தொடரக்கூடாது என்பதற்கானத் தேர்தல்.
‘இந்தியா’ கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் மற்றும் பலவீனங்களாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? கடந்த இரண்டு தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கும், காங்கிரஸின் தோல்விக்கும் முக்கிய காரணிகள் என்னவென்று நீங்கள் கூறுவீர்கள்?
அரசியல் களத்துக்குரிய ஏற்ற இறக்கங்கள் எல்லா அணியிலும் இருக்கும். முந்தைய இரண்டு தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மோடி என்ற பிம்பத்தைக் கட்டமைத்து அதன் பெயரில் வெற்றி பெற்றது. புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைக்கூட தேர்தல் அரசியலுக்கு பாஜக பயன்படுத்தியது. எனினும், கடந்த 2019 தேர்தலிலேயே மோடியையும் பாஜக-வையும் வீழ்த்துவதற்கான ஃபார்முலாவைத் தமிழ்நாடுதான் உருவாக்கித் தந்தது. தமிழ்நாட்டில் பாஜக-வின் மதவாத அரசியலுக்கு எதிரான ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் நின்று ஒரு கொள்கைக் கூட்டணியாகத் தேர்தலை சந்தித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில், காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வென்றது. பாஜக-வுக்கு ஓரிடம் கூட தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. அந்த ஃபார்முலாவின் விரிவாக்கம்தான் தற்போதைய இந்தியா கூட்டணி.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி மற்றும் திமுக தலைமையிலான கூட்டணியின் வாய்ப்புகள் எப்படி உள்ளது?
ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இந்திய நாட்டு மக்கள் தயாராகிவிட்டார்கள். பாஜக-வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மூன்றாவது முறையாக எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்று மோடி கேட்கிறார். இரண்டு முறை மோடியிடம் ஏமாந்த இந்திய மக்கள் இம்முறை மோடியை ஏமாற்றத் தயாராகி விட்டார்கள். ஒன்றிய அரசில் ஆட்சியமைக்கும் வகையில்’ ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறும்.
பிரதமர் வேட்பாளர் குறித்து ‘இந்தியா’ கூட்டணிக்குள் விவாதிக்கப்படுவது என்ன? பிரதமர் தேர்வில் நீங்கள் பங்கு வகிக்க வேண்டாமா?
அதற்குரிய நேரம் வரும்போது, எனக்கு உரிய பங்கினை நான் ஆற்றுவேன்.
பிரதமராக நரேந்திர மோடியைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
இந்தியாவின் ஜனநாயகம், பன்முகத்தன்மை இவற்றுக்கு எதிரான ஆட்சியைப் பத்தாண்டுகாலம் நடத்தியிருக்கிறார் மோடி. அரசியலமைப்புச் சட்டத்தையும் பா.ஜ.க அரசு மதிக்கவில்லை. இந்தியாவின் தேர்தல் நடைமுறையையே சிதைக்கின்ற போக்குதான் வெளிப்பட்டது. பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாடு மொத்தமாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முகத்தைச் சிதைக்க நினைக்கும் மோடியை, அதிகாரத்தில் இருந்து இறக்காவிட்டால் இந்தியாவில் இன்று நம் கண் முன்னால் பார்க்கும் அனைத்துக்குமே ஆபத்து.
இத்தேர்தலில் தமிழகத்தில் தேர்தல் போட்டி எப்படி இருக்கும்? கடினமானதா… எளிதானதா?
வெற்றி மீதான நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்கிறோம். காரணம், திமுக மீதும் அதன் கூட்டணி மீதும் தமிழ்நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏதேனும் ஒரு வகையில் பயன் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியதாக திமுக உள்ளது.
இவ்வாறு அந்த பேட்டியில் முதலமைச்சர் கூறியுள்ளார்.