Amazing Tamilnadu – Tamil News Updates

‘நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் … அடுத்த பட்ஜெட்டை இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும்’ – மு.க.ஸ்டாலின் உறுதி!

ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம் என்றும், இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கையும் உற்சாகமும் மேலிட, திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் திமுக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளதோடு, “பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம். மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வதை, விரும்பிய உடையை உடுத்துவதை, விரும்பிய உணவை உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமைகளை கட்டிக்காப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது திமுக” எனத் தெரிவித்துள்ளார்.

தோழமைக் கட்சிகளுடன் சுமூக பேச்சுவார்த்தை

மேலும், தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் காங்கிரஸ் கட்சியுடனும், மற்ற தோழமைக் கட்சியினருடனும் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக தனக்கு செய்திகள் எட்டியபடி உள்ளதாக கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.

திமுக-வின் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் குறித்து குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், “சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம் என்பதுதான் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி. அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பா.ஜ.க போலவோ அதன் கள்ளக்கூட்டணியான அ.தி.முக. போல தி.மு.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது என்பதால், தங்கை கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று பலதரப்பு மக்களையும் அமைப்புகளையும் சந்தித்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற பொறுப்பில் திமுக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரிலும், கடிதத்திலும், மின்னஞ்சலிலும், QR Code வாயிலாகவும் வழங்கி வருகிறார்கள்!” என மேலும் கூறியுள்ளார்.

‘அடுத்த பட்ஜெட்டை இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும்’

“மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல். மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு குடும்பமும் கழக ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுபடுத்துங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள். அந்த இலக்கை திமுக நிச்சயம் அடைந்துவிடும் என்கிற நம்பிக்கை அண்ணா அறிவாலயத்தில் கழக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடனான சந்திப்பின்போது நிர்வாகிகள் காட்டும் உற்சாகத்திலேயே நன்கு புலப்படுகிறது. அந்த உற்சாகம், தேர்தல் களப்பணிகளிலும் குன்றாமல் குறையாமல் வெளிப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பாஜக. அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம்” என அதில் மேலும் கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.

Exit mobile version