Amazing Tamilnadu – Tamil News Updates

தேர்தல் நன்கொடையில் பாஜக முதலிடம்: அமித் ஷா சொல்லும் விளக்கம் என்ன?

ச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்கள், நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில், லாட்டரி நிறுவன அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் ரூ.1,368 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கி முதலிடத்தில் உள்ளார் . இவ்வாறு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளில் மத்தியில் ஆளும் பாஜக ரூ. 6,060 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

மொத்தத்தில் 12,155 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள், நன்கொடையாளர்களால் வாங்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், தேர்தல் பத்திர எண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த எண்கள் வெளியானால்தான், எந்தெந்த கட்சிகளுக்கு யார் யார் நிதி வழங்கியிருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்

இதனிடையே மத்தியில் ஆட்சியில் இருப்பதால் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித் துறை போன்ற தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஏஜென்சிகள் மூலம் ரெய்டுகள் நடத்தியும், மிரட்டியும், சாலைகள் அமைத்தல், கட்டுமானங்கள் போன்ற கான்ட்ராக்டுகளை வழங்கியும், அதற்கு பிரதி உபகாரமாக நிறுவனங்களிடமிருந்து பாஜக நன்கொடையைப் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அதற்கு பல உதாரணங்களை முன் வைத்துள்ளனர்.

ரெய்டு ஒரு குறிப்பிட தினத்தில் நடந்திருந்தால், அதற்கு ஓரிரு தினங்கள் கழித்து அந்த நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்கள் வாங்கியிருப்பது எஸ்பிஐ வங்கி கொடுத்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது, வெறும் 10 கோடி, 15 கோடி மதிப்பு கொண்ட ஷெல் கம்பெனிகள் எனப்படும் போலி நிறுவனங்கள், 300 கோடி, 400 கோடி என தேர்தல் பத்திரங்கள் வாங்கி இருப்பதாகவும், இவையெல்லாம் பாஜக-வுக்குத்தான் போயிருக்கும் என்பதையெல்லாம் சொல்லவே தேவையில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

கருப்பு பணத்தை ஒழிக்கத்தான்… அமித்ஷா சொல்லும் விளக்கம்

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், அதிக நன்கொடை பெற்றதில் பாஜக முதலிடத்தில் இருப்பது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இன்று ‘இந்தியா டுடே’ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்ததன் நோக்கமே அரசியலிலிருந்து கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் என்று கூறினார்.

“இந்திய அரசியலில் கருப்புப் பணத்தின் செல்வாக்கை ஒழிப்பதற்காகத்தான் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நான் முழுமையாக மதிக்கிறேன். ஆனால் தேர்தல் பத்திரங்களை முற்றிலுமாக ரத்து செய்வதற்குப் பதிலாக அதை மேம்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பாஜக ஆட்சியில் இருப்பதால் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தால் பயனடைந்ததாக ஒரு கருத்து உள்ளது. அது பற்றிய எனது நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மொத்தம் ரூ.20,000 கோடி தேர்தல் பத்திரங்களில், பாஜக-வுக்கு சுமார் ரூ. 6,000 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள பத்திரங்கள் எதிர்க்கட்சிகளுக்குத்தான் கிடைத்துள்ளன.

303 எம்.பி.க்கள் இருந்தும் எங்களுக்கு ரூ 6,000 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ. 14,000 கோடி 242 எம்.பி.க்களைச் சார்ந்த கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஈட்டியுள்ள நிதியானது, மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தோடு சற்றும் ஒத்துப்போகவில்லை.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1600 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.1400 கோடி பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி ரூ.775 கோடி பெற்றுள்ளது. திமுக ரூ.649 கோடி பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அமலான பின்னர் கட்சிகளுக்கான நிதியில் ரகசியம் என்பதே இல்லாமல் போனது. காரணம் நிதி வழங்கியவர், நிதி பெறுபவர் இருவரின் வங்கிக் கணக்கில் நன்கொடை விவரம் இடம்பெறுகிறது. இதில் கூச்சலிட என்ன உள்ளது?” என அமித்ஷா மேலும் தெரிவித்தார்.

ஆனால், எதிர்க்கட்சிகள் அமித்ஷாவின் இந்த விளக்கத்தை ஏற்கத் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் எந்த நிறுவனங்களையும் மிரட்டவில்லை என்றும், ஆனால் பாஜக மத்திய ஏஜென்சிகள் மூலம் நிறுவனங்களை மிரட்டி நன்கொடை வாங்கி இருப்பது அப்பட்டமான உண்மை என்றும் அவை கூறி வருகின்றன.

Exit mobile version