Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட சூரியசக்தி மின்சார உற்பத்தி!

புவி வெப்பமடைதல் பிரச்னை என்பது இன்று உலகையே ஆட்டிப்படைக்கக் கூடிய மிக முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது மின் உற்பத்தி நிலையங்கள். இதற்கு மாற்றாக இருப்பது சூரிய ஆற்றல். இது புவி வெப்பமடைவதைத் தடுக்கக்கூடிய முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் மிக அதிகமான சூரிய ஆற்றலும் குறைந்த அளவு மழையும் கிடைப்பதால் இங்கு சூரிய மின்சாரம் அதிக அளவு பெறப்படுகிறது.

புதிய உச்சத்தை எட்டிய சூரியசக்தி மின் உற்பத்தி

அதிலும், தமிழ்நாட்டில் சமீப நாட்களாக அதிகரிக்கும் வெயிலின் வெப்பத்தால் மக்கள் ஒருபுறம் சிரமத்துக்குள்ளாகுகிறார்கள் என்றாலும், சூரிய ஆற்றலின் அளவு அதிகரித்திருப்பது இன்னொரு நன்மையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மட்டும் தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி அதிகபட்சமாக 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மாநிலத்தின் மின் தேவையும், மின்சார பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதியன்று மாநிலத்தின் மின் தேவை 20,341 மெகாவாட் ஆக இருந்த நிலையில், மின்சார பயன்பாடு 448.21 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “மாநிலத்தின் மின்சார பயன்பாடு ஒவ்வொரு நாளும் 400 மில்லியன் யூனிட்டுக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 23 ஆம் தேதி 441.364 மில்லியன் யூனிட்டுகள் நுகரப்பட்டது. இதில் சூரிய சக்தி ஆற்றல் மட்டுமே கிட்டத்தட்ட 10 சதவீதத்தைப் பூர்த்தி செய்துள்ளது. தெளிவான வானம், நீடித்த பகல் நேரம் மற்றும் சூரிய சக்தி நிறுவு திறன் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் அதிக சூரிய ஆற்றல் உற்பத்தி ஆகி உள்ளது.

உச்சபட்ச சூரிய சக்தி உற்பத்தி, கடந்த மார்ச் 5 ஆம் தேதி 5,398 மெகாவாட் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சூரிய சக்தியின் நிறுவு திறன் 1,265 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக அதிக சூரிய மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, ​​தமிழகத்தில் சூரிய மின்சக்தியின் மொத்த நிறுவப்பட்ட திறன் 7394.45 மெகாவாட் ஆக உள்ளது” எனத் தெரிவிக்கின்றனர்.

7,426 மெகாவாட் சூரியசக்தி மின்நிலையங்கள்

தமிழகத்தில் தற்போது நிலப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவுதிறன் 6,912 மெகாவாட்டாக உள்ளது. இதுதவிர, கட்டிடங்கள் மேல் அமைக்கப்பட்ட மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவுதிறன் 449 மெகாவாட், விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவுதிறன் 65 மெகாவாட் என மொத்தம் 7,426 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன. இவற்றிலிருந்து தினமும் சராசரியாக 2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மாதத்தின் மின்சார தேவை 21,000 மெகாவாட் ஆக உயரும் என தமிழக மின்வாரியம் எதிர்பார்க்கிறது. அதே சமயம், கொளுத்துகிற வெயிலால் சூரிய மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

கை கொடுக்க காத்திருக்கும் காற்றாலை மின்சாரம்

இதனிடையே, இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 10,603 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. இவற்றிலிருந்து தற்போது தினமும் ஒரு கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன் ஆகும்.

அப்போது, காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 10 கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும். அது தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மேலும் கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version