இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஊக்க நடவடிக்கைகளும், பெண் தொழிலாளர்களுக்குஸ சாதகமாக வகுக்கப்படும் கொள்கைளுமே முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது.
மத்திய அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான தொழில்துறை சார்ந்த ஆண்டு கணக்கெடுப்பு, அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், நாட்டின் மொத்த பெண் தொழிலாளர்களில் தமிழ்நாடு 42 சதவீதத்துடன் முதலிடத்தில் இருப்பதாகவும், கர்நாடகா 14 சதவீத பெண் தொழிலாளர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழக அளவில் எடுத்துக் கொண்டால், மொத்த தொழிற்சாலை தொழிலாளர்களில் 37.5 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். கடந்த இருபதாண்டுக் கால தரவுகளை ஆய்வு செய்யும்போது, நாட்டின் தொழிற்சாலை பணியாளர்கள் விகிதத்தில், 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நிதியாண்டிலும் 35 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்கள் தமிழ்நாட்டிலிருந்தே வந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
தமிழ்நாடு அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்
இந்திய அளவில் தமிழக பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதற்கு, மாநிலத்தில் கல்வித் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பெண்களுக்கான குறைந்தபட்ச கல்வியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகள், உயர் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போன்றவையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
மேலும், அருகிலுள்ள எந்த ஒரு ஊருக்கும் வேலைக்கு எளிதாக சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள், மகளிருக்கான இலவசப் பேருந்து பயண திட்டம், வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளிக்குச் செல்லும் தங்களது குழந்தைகளுக்கான உணவு தயாரிக்கச் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டம், மகளிர் தைரியமாக வெளியில் சென்று வரும் வகையில் நிலவும் பாதுகாப்பான சூழ்நிலை போன்றவையே வீடுகளில் முடங்கிக் கிடந்த பெண்களை உழைக்கும் பெண்களாக மாற்றி உள்ளது.
அதுமட்டுமல்லாது, பெண்கள் பணிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றங்களும் கூடுதல் பங்களிப்பைச் செய்கின்றன. இதற்கு உதாரணமாக, உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மூன்றாவது ஷிப்ட்டை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாட்டைப் பின்பற்றியே பல இந்திய மாநிலங்களும் இதை தங்களது மாநிலங்களிலும் செயல்படுத்தின.
கொள்கை மாற்றங்கள், பாதுகாப்பு
இது குறித்துப் பேசும் முன்னணி தனியார் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவர், “பெண்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனத்தைக் கொண்டே பெண்களுக்கான மூன்றாவது ஷிப்ட்டைச் செயல்படுத்தியுள்ளோம். மூன்றாவது ஷிப்ட்டுக்குச் செல்லும் பெண்களை வீட்டுக்கே வாகனத்தில் வந்து அழைத்துச் சென்று, பின்னர் வீட்டில் கொண்டு சென்று விடும் ‘ பிக் அப் அண்ட் டிராப் ‘ முறையைச் செயல்படுத்துகிறோம்.
தமிழக அரசின் இந்த முன்னோடி நடவடிக்கை, உற்பத்தி துறைகளில் பெண்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பைத் திறக்க உதவியது. இதனால், வரும் ஆண்டுகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம் ” என்று கூறுகிறார்.
“தமிழ்நாடு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு, குறிப்பாக பெண்களிடத்தில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு தரமான கல்வி மற்றும் தொழில் பயிற்சி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு உற்பத்திப் பணிகளில் பெண்களை சிறந்து விளங்கச் செய்துள்ளோம்” என்று கூறும் தமிழக அரசின் தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய தரவு, பெண்களுக்கு எதிரான குற்ற விகிதங்களில் தமிழ்நாடு மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இவையெல்லாம் தான், தமிழக பெண்களின் இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது எனலாம்!