Amazing Tamilnadu – Tamil News Updates

2026 தேர்தலும் அடுத்த இரண்டு ஆண்டுக் கால ஆட்சியும்… முதலமைச்சரின் திட்டம் என்ன?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவிக்கு வந்து மூன்றாண்டுக் காலம் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40/40 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் இதே வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மு.க. ஸ்டாலின் மிகவும் முனைப்பாக உள்ளார்.

திமுக செல்வாக்கு அதிகரிப்பு ஏன்?

தற்போதைய தேர்தல் வெற்றிக்கு, கடந்த மூன்றாண்டுக் கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தான் முக்கிய காரணம் என்பதில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார். குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போன்றவை திமுகவுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது மேற்கொள்ளப்பட்ட துரிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் மக்களிடையே நல்லபெயரைப் பெற்றுத்தந்தது.

அடுத்த இரண்டு ஆண்டுக் கால ஆட்சிக்கான இலக்கு

இந்த நிலையில்தான், இன்னும் மீதமுள்ள இரண்டாண்டுக் கால ஆட்சியிலும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து, 2026 தேர்தலிலும் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் தீவிரமாக உள்ளார்.

அந்த வகையில், சென்னையில் இன்று நடைபெற்ற 14 மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில், அடுத்த இரண்டாண்டுக் கால ஆட்சி எப்படி இருக்க வேண்டும், மக்கள் நலத்திட்டங்களை எப்படி செயல்படுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கினார்.

இது தொடர்பாக அவர்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிக முக்கியமான ஆண்டுகள். புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இது நமது அரசு என்று மக்களை நினைக்க வைத்துள்ளோம். இவை அனைத்தும் தொய்வில்லாமல், வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும்.

திட்டங்களை விவரித்த மு.க. ஸ்டாலின்

“மக்களுடன் முதலமைச்சர்” திட்டத்தினை வரும் ஜூலை திங்கள் 15-ஆம் நாள் முதல் செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” மற்றும் “நீங்கள் நலமா?” போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது. வருவாய்த் துறையில், பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

“கலைஞர் கனவு இல்லம்” திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் நீங்கள் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வகையில் “கல்லூரிக் கனவு” “உயர்வுக்குப் படி” போன்ற திட்டங்களை நீங்கள் ஆர்வத்துடனும், முனைப்புடனும் செயல்படுத்த வேண்டும்.

2026 தேர்தலுக்கான வியூகம்

அதேபோல், விரைவில் தொடங்கப்படவிருக்கும் “தமிழ்ப்புதல்வன்” திட்டமும் மிகவும் முக்கியமான திட்டமாகும். இதுபற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தையும் நீங்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சரின் இந்த திட்டமிடலும், மாவட்ட ஆட்சியர்களுக்கான அறிவுறுத்தல்களும் அடுத்த இரண்டு ஆண்டுக் கால ஆட்சியை எப்படி நடத்திச் செல்ல வேண்டும், 2026 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை துல்லியமாக காட்டுகின்றன என்றே சொல்லலாம்.

Exit mobile version