Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழகத்துக்கு கைகொடுக்கும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம்!

மிழகத்தில் உள்ள சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின் உற்பத்தி செய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்கள் சூரியசக்தி மின்நிலையங்களை ஆர்வத்துடன் அமைத்து வருகின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவப்பட்டுள்ள சூரியசக்தி, காற்றாலை, சிறிய நீர்மின் நிலையம், தாவரக்கழிவு, சர்க்கரை ஆலை ஆகியவற்றை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறன் எவ்வளவு என்பது குறித்த புள்ளி விவரங்களை மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி துறை வெளியிடுவது வழக்கம். இதில், கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி தமிழகத்தில் அதிக திறனில் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் 6,649 மெகாவாட், மேற்கூரை மின் உற்பத்தி 449 மெகாவாட், விவசாய நிலங்களில் 65.86 மெகாவாட் என மொத்தமாக சூரியசக்தி மின் உற்பத்தி 7,163.86 மெகாவாட்டாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நாட்டிலேயே புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

கோடையில் அதிகரித்த மின் நுகர்வு

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில், தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் வீடுகளில் ஏ.சி பயன்பாடு அதிகரித்ததால், மின் நுகர்வு தினமும் 40 கோடி யூனிட்களை தாண்டியது. அந்த வகையில், தமிழகத்தின் மின் நுகர்வை பூர்த்தி செய்வதில், காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் ஆகியவை மிகவும் கைகொடுத்து உதவுகின்றன. இந்த இரண்டு வகையிலான மின் உற்பத்தி மூலம் 11 கோடி யூனிட்கள் கிடைத்ததால், மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் இவை முதலிடத்தில் உள்ளன.

முன் நுகர்வு அதிகமாகும் தருணங்களில், அதனை பூர்த்தி செய்வதற்கான மின் உற்பத்தி, மின் கொள்முதல் மேலாண்மை பணிகளை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மேற்கொள்கிறது. அந்த மையத்தின் தரவுகளின்படி, பல்வேறு தனியார் நிறுவனங்கள், 9,019 மெகா வாட் திறனில் காற்றாலை; 8,116 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. ஜூன் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், மாநிலத்தின் தற்போதைய மின் நுகர்வு, 35 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ளது.

கைகொடுத்த காற்றாலை மின்சாரம்

இந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் காற்றாலை சீசன் துவங்கியுள்ளது. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி வேகம் அதிகரித்து, காற்று சீசன் தொடங்கியுள்ளதால், வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என இந்திய காற்றாலை மின் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 1 அன்று மாநிலத்தில் காற்றாலை ஆற்றல் நுகர்வு 21.9 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்தது. அதற்கு அடுத்த தினம், கிட்டத்தட்ட 694 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில், தென்மேற்கு காற்று வீசி வருவதால், கடந்த 2 நாட்களாக அதிகளவில் காற்றாலைகள் மின் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகரித்த சூரியசக்தி மின்சாரம்

சூரியசக்தி மின் உற்பத்திக்கு, சூரியனின் வெளிச்சமே முக்கியம்; வெப்பம் அல்ல. தற்போது, சூரியசக்தி மின்சாரமும் அதிகம் கிடைக்கிறது. அதன்படி, நேற்று ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி காற்றாலைகளில், 7.69 கோடி யூனிட்களும்; சூரியசக்தி மின் நிலையங்களில், 3.75 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது. அன்றைய நாளின் மின் நுகர்வு, 34.76 கோடி யூனிட்கள். அதை பூர்த்தி செய்ததில், 11.44 கோடி யூனிட்களுடன் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து, மத்திய அனல், அணுசக்தி மின்சாரத்தின் பங்கு, 9.42 கோடி யூனிட்களாகவும்; மின் வாரிய அனல் மின்சாரத்தின் பங்கு, 7.64 கோடி யூனிட்களாகவும் உள்ளன. மீதி மின்சாரம், தனியார் எரிவாயு, அனல் மின்சார கொள்முதலாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version