சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசையே நடத்தச் சொல்வது ஏன்? – தனித் தீர்மானத்தை கொண்டுவந்த முதலமைச்சர் விளக்கம்!

மிழக சட்டப்பேரவையில் இன்று சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது தீர்மானத்தின் அவசியம் குறித்தும், இந்த கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

இது தொடர்பான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், “சமீபகாலமாக, சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம்கூட, இந்தப் பேரவையிலே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கோ.க.மணி பேசும்போதுகூட, சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தினைத் தெரிவித்திருந்தார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம்

சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுக-வின் கருத்தும் என்பதை முதலில் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பொருள் குறித்து இந்தப் பேரவைக்கு முழுமையான விவரங்களை எடுத்துரைப்பது சரியானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அதாவது, ஒன்றிய அரசால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதாவது, Census Act 1948-ன்கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு மாபெரும் பணி. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசால் நடத்தப்பட்டுவரும் ஒரு மாபெரும் பணி. மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்டு ஒன்றிய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்படி ஒன்றிய அரசுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும். ஆனால், பொதுவெளியில் பரவலாகத் தெரிவிக்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால், புள்ளிவிவரச் சட்டம் 2008, அதாவது, Collection of Statistics Act, 2008-இன் அடிப்படையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்பதாகும்.

மத்திய அரசையே நடத்தச் சொல்வது ஏன்?

இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுகள் சமூகப் பொருளாதார புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர, இதே சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (அ)-ன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையிலுள்ள இனங்கள் தொடர்பாக புள்ளிவிவரங்கள் சேகரிக்க இயலாது. அந்த 7-வது அட்டவணையில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு 69-வது இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இச்சட்டத்தின் பிரிவு 32-ன்படி மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன்கீழ் கணக்கெடுக்கப்படும் மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்களை (Census data) சேகரிக்க இயலாது என்று மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பொருள் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பொதுவெளியில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளபடி 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள இயலாது. சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால், அது ஒன்றிய சட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவேதான், இப்பணியை ஒன்றிய அரசு மேற்கொள்வதுதான் முறையாக இருக்குமென்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 246-ன்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணியான மக்கள்தொகை கணக்கெடுப்பினை 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு இன்றுவரை காலம் தாழ்த்தி வருவது எதனால்? முதல் ஆண்டு கோவிட் பெருந்தொற்றைக் காரணமாக சொன்னார்கள். தற்போது கோவிட் சென்று 3 ஆண்டுகளுக்கு மேலான பின்பும் அப்பணியை மேற்கொள்ளாமல் இருப்பது ஒன்றிய அரசு தன் கடமையைப் புறக்கணிக்கும் செயல் அல்லவா?

சட்டரீதியான பாதுகாப்பு

நாம் தொடர்ந்து கோரிக்கை வைப்பது மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மட்டுமல்ல, அத்துடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உடனடியாகத் தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த 20.10.2023 அன்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அவ்வாறு ஒன்றிய அரசு களப்பணியை மேற்கொள்ளும்போது கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கும், இயற்றும் சட்டங்களுக்கும் தான் சட்டரீதியான பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.

மாறாக, அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே (Survey) என்ற பெயரில் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது, பின்னர் அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது என்றால் அது பின்னொரு நாளில் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது. எனவேதான், இந்தக் காரணங்களின் அடிப்படையில், ஏற்கெனவே தாமதப்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்தவேண்டும் என்றும் இந்தப் பேரவை வாயிலாக நான் முன்மொழிய விரும்புகிறேன்” என்றார்.

தீர்மானம் நிறைவேற்றம்

அதனை தொடர்ந்து முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

List your charter yachts or bareboats with yachttogo. Hest blå tunge. masterchef junior premiere sneak peek.