Amazing Tamilnadu – Tamil News Updates

கோடக் மஹிந்திரா வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரச்னையா? RBI நடவடிக்கையால் சரிந்த பங்கு விலை!

நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை

இந்த நிலையில் விதிமுறைகளைச் சரிவர பின்பற்றாததால், கோடக் மஹிந்திரா வங்கி இனிமேல், ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவோ, புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவோ கூடாது என ரிசர்வ் வங்கி அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கியின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ததில், அதன் செயல்பாடுகள் மீது ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிருப்தி தெரிவித்து வந்ததாகவும், ஆனால் அதனை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுக்க நேரிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலையின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்தது. நேற்றைய வர்த்தக நாளில் மட்டும் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் 10.85 சதவீதம் சரிந்து, அதன் விலை ரூ.1,643 ஆக வீழ்ச்சி அடைந்தது. இதனால், அந்த வங்கி ஒரே நாளில் 10,225 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனால், கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகளை வைத்திருந்தோர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரச்னையா?

இந்த நிலையில், மேற்கூறிய நிகழ்வுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலமாக Kotak 811 கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர்களிடையே குழப்பமும் பீதியும் ஏற்பட்டது. தங்களது வங்கி கணக்குக்கு பாதிப்பு ஏற்படுமா, அதில் போட்டு வைத்திருக்கும் தங்களது பணம் பத்திரமாக இருக்குமா, ஏற்கெனவே தங்களுக்கு வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை புதுப்பிக்க முடியுமா, அந்த வங்கியில் புதிதாக கணக்கு தொடங்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் எழத் தொடங்கி உள்ளன.

இதனையடுத்து வாடிக்கையாளர்களின் இந்த குழப்பத்தையும் அச்சத்தையும் போக்கும் விதமாக கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் வாஸ்வானி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இன்று இ-மெயில் அனுப்பி உள்ளார்.

அதில், “கோடக் மஹிந்திரா வங்கியில் உங்களது வங்கி கணக்கு சேவை, கிரெடிட்/டெபிட் கார்டுகள், ஏடிஎம் சேவை, மொபைல் மற்றும் நெட் பேங்கிங் சேவைகள் உட்பட ஏற்கனவே உள்ள உங்களது வங்கி கணக்குக்கான அனைத்து வங்கிச் சேவைகளையும் தொடர்ந்து பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவு காரணமாக புதிய வாடிக்கையாளர்கள் Kotak 811 டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைத் தொடங்க முடியாது. ஆனால் கோடக் மஹிந்திரா வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் நேரடியாக சென்று புதிய சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம். அதற்கு தடை இல்லை.

கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்களா?

கிரெடிட் கார்டுகளைப் பொறுத்தவரை, கோடக் வங்கி புதிதாக அந்த கார்டுகளை வழங்க முடியாது. ஆனால், ஏற்கெனவே வாங்கிய கிரெடிட் கார்டுகளை புதுப்பித்தல் உட்பட ஏற்கனவே இருக்கும் சேவைகளைத் தொடர்ந்து பெற முடியும்.

எவ்வளவு நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்கும்?

வெளிப்புற தணிக்கை மற்றும் திருத்த நடவடிக்கைகள் முடிந்ததும் அவை மதிப்பாய்வு செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்த பின்னர் இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், அதற்கு 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகும் என்று தெரிகிறது.

Exit mobile version