Amazing Tamilnadu – Tamil News Updates

குறையும் குடும்ப சேமிப்புகள்… மக்களிடையே ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்!

மீப காலமாக மக்களிடையே குடும்ப சேமிப்புகள் குறைந்துபோனதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்த நிலையில், அதற்கான உண்மையான காரணம், சேமிப்பு விஷயத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

கடந்த 2020-2021-ல் ரூ.23 லட்சத்து 29,671 கோடியாக இருந்த குடும்ப சேமிப்பு, கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலையைக் கண்ட 2021-2022-ல் ரூ.17 லட்சத்து 12,704 கோடியாகவும், பின்னர் 2022-23-ல் ரூ.14 லட்சத்து 16,447 கோடியாகவும் குறைந்துவிட்டதாகவும், இது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வீழ்ச்சி என்றும் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளைச் சுட்டிக்காட்டி நிதித் துறை நிபுணர்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

இந்த புள்ளி விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, மக்களிடையே உண்மையிலேயே குடும்ப சேமிப்புகள் குறைந்துவிட்டனவா, அப்படி குறைந்துபோனால் அதற்கான காரணம் என்ன, குறையவில்லை என்றால் மக்களின் சேமிப்பு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

சேமிப்பு குறைவுக்கு காரணம் என்ன?

இது குறித்து பேசும் நிதித் துறை நிபுணர்கள், “மக்களிடையே குடும்ப சேமிப்பு குறைந்துபோனதால், அவர்கள் சேமிப்பை கைவிட்டுவிட்டார்கள் என்று அர்த்தமாகாது. சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் குறைவு என்பதால், அவர்கள் அதிக வருவாயைத் தேடி தங்கள் சேமிப்பை ரியல் எஸ்டேட், அதாவது வீடு, மனைகள், நிலங்கள் வாங்குவதோடு மட்டுமல்லாமல், தங்கம், பங்குகள், மியூச்சுவல் பண்டுகளிலும் முதலீடு செய்கிறார்கள். எனவே இப்போது சேமிப்பு குறைந்து, முதலீடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மக்கள் வீடு, மோட்டார் வாகனங்கள் வாங்குவதற்காக நிறைய கடன்கள் வாங்குகிறார்கள் மற்றும் பல்வேறு செலவுகளுக்காக தனி நபர் கடன்களையும் வங்கிகளில் வாங்குகிறார்கள். அதற்கான மாதாந்திர தவணை கட்டுவதாலும் சேமிப்பு குறைந்துவிட்டது” எனத் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு சேமிப்பிற்கு குடும்ப சேமிப்புகள் முக்கிய பங்களித்து, முழுமையான வளர்ச்சியைக் காட்டினாலும், மொத்த சேமிப்பில் அதன் விகிதம் படிப்படியாகக் குறைந்துள்ளது.

அதே நேரத்தில், ஆர்வமுள்ள இந்தியக் குடும்பங்கள் ரியல் எஸ்டேட்டில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன, 2022-23 ஆம் ஆண்டுக்கான குடும்பச் சேமிப்பில் பிசிக்கல் ( நிலம், வீடு போன்ற) சொத்துக்களின் பங்கு அதிகரித்து வருகின்றன. சுருக்கமாக சொல்வதானால், பணம் ஒரு பாக்கெட்டிலிருந்து இன்னொரு பாக்கெட்டிற்கு மாறிவிட்டது எனச் சொல்லலாம்.

மக்களின் மனமாற்றம்

மேலும் சேமிப்பு, முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவற்றின் பெயரிடல் மற்றும் வரையறையிலும் பிரச்சனை உள்ளது. ரியல் எஸ்டேட்டை நோக்கி எந்தவொரு வடிவத்திலும் (குடியிருப்பு மற்றும் நிலம்) செலுத்தப்படும் வீட்டுச் சேமிப்புகள் முதலீடாகக் கணக்கிடப்படுமே அன்றி, தனிப்பட்ட நுகர்வாக இருக்காது.

அதனால்தான் கடந்த காலாண்டில், நுகர்வு உந்துதல் வளர்ச்சி நிகழ்வில் ஒரு விலகல் இருந்தது. அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் மொத்த மூலதன உருவாக்கத்தின் சிறந்த வளர்ச்சி செயல்திறன் இருந்தபோதிலும், நுகர்வு வளர்ச்சி ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது.

ரியல் எஸ்டேட் தவிர, தங்கச் சந்தைகளில் நீடித்த எழுச்சி, ஆபரணங்கள் மூலம் சேமிப்பில் அதிகரிப்பு ஆகியவற்றுடன், மக்கள் நிதி சார்ந்த சொத்துக்களை விட உறுதியான சொத்துக்களை விரும்புவதும் குடும்ப நிதி சேமிப்பு குறைந்து போனதற்கான காரணமாக கருதப்படுகிறது.

Exit mobile version