Amazing Tamilnadu – Tamil News Updates

இனி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் ‘சைபர் சட்டம்’ படிக்கலாம்… சட்ட படிப்பு மாணவர்களுக்கு AI படிப்பு!

ற்போதைய டிஜிட்டல் உலகில் இணையம் சார்ந்த குற்றங்கள் அதிகரித்துவிட்டதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம் (IT) ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், சைபர் சட்டங்கள் குறித்தும் அறிந்திருப்பது அவசியமாக உள்ளது.

‘சைபர் சட்டம்’, பொதுவாக ஐடி சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது, கணினிகள் மற்றும் இணையம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய சட்டமாகும். மேலும் தகவல், மென்பொருள், தகவல் பாதுகாப்பு மற்றும் இ-காமர்ஸ் ஆகியவற்றின் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்பார்வை செய்வதோடு ஒப்பந்தங்கள், அறிவுசார் சொத்து, தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புச் சட்டங்கள் போன்ற அம்சங்களையும் கையாள்கிறது. அதாவது இணையத்தில் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் சைபர் சட்டத்தின் கீழ் வருகிறது.

ஐடி மாணவர்களுக்கு ‘சைபர் சட்டம்’ படிப்பு

இதனை கருத்தில் கொண்டே, வரவிருக்கும் 2024-25 ஆம் கல்வியாண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம் (IT) ஆகிய இரண்டு பிரிவு மாணவர்களுக்கும் ஒரு செமஸ்டரில் சைபர் சட்டத்தை ஒரு பாடமாக கற்றுக்கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மட்டுமல்லாது, கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) ஆகிய கல்லூரிகளில் பயிலும் மேற்கூறிய இரு பிரிவு மாணவர்களுக்கும் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

இது குறித்துப் பேசும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர் வேல்ராஜ், “சைபர் பாதுகாப்பு, சைபர் தடயவியல் போன்ற துறைகளில் தொழிலைத் தொடர ஆர்வமுள்ள கணினி அறிவியல் மாணவர்கள் இணையச் சட்டங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக சட்டப் பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் படிக்கும் வாய்ப்பை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம் ” என்று கூறுகிறார்.

சட்ட படிப்பு மாணவர்களுக்கு AI படிப்பு!

வெவ்வேறு படிப்புகள் சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவர்கள் பரஸ்பரம் சென்று பயில இடமளிக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்தினை மாற்றியமைத்து வருகிறது.

இதன்படி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம் பயிலும் மாணவர்கள், மூன்றாவது செமஸ்டர் முதல் வேறு பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு செமஸ்டர் படிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற தற்போதைய காலத்துக்குத் தேவையான பாடப்பிரிவுகளை தனது கல்லூரி வளாகங்களில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதிக்கும். இது தொடர்பாக இவ்விரு பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

வேளாண் மாணவர்களுக்கு ட்ரோன் டெக்னாலஜி படிப்பு

ஒரு பேட்ச்-சில் 60 மாணவர்களை இதுபோன்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான படிப்புகளைப் படிக்க அனுமதிக்கும் அண்ணா பல்கலைக்கழகம், சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் ஒரு செமஸ்டர் விவசாய படிப்பைப் படிக்கவும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மண், விவசாயம் மற்றும் புதிய உபகரணங்களின் தேவை பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த படிப்பு உதவும்.

அதேபோன்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி விவசாயம் பயிலும் மாணவர்கள், பூச்சிக்கொல்லிகளை தெளிக்க ட்ரோன்களைப் பயன்படுத்துதல் குறித்த தொழில்நுட்ப படிப்பு மற்றும் பிற விவசாயம் தொடர்பான வேலைகளில் பயிற்சி பெறுவதற்கான படிப்புகளையும் பயில்வார்கள். இது இவ்விரு பல்கலைக் கழக மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு, நிச்சயம் காலத்தின் தேவைக்கேற்ற வரவேற்க தகுந்த முடிவு என்றே சொல்லலாம்!

Exit mobile version