Amazing Tamilnadu – Tamil News Updates

ஒடிசா அரசியலில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பிய தமிழக அதிகாரி… மோடியே விமர்சித்ததால் சூடான தேர்தல் களம்!

டிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நெருக்கமான உதவியாளராகவும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் செல்வாக்கு மிக்க நபராக கலக்கி வருபவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் தமிழருமான வி.கார்த்திகேய பாண்டியன்.

முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலராகப் பணியாற்றிய இவர், பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவர் ஆவார். ‘வி.கே. பாண்டியன்’ என ஒடிசா மக்களால் அழைக்கப்படும் இவர், கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வுபெற்ற நிலையில், அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான பதவியில் நியமிக்கப்பட்டார். இது, அம்மாநிலத்தையும் தாண்டி ‘யார் இந்த கார்த்திகேய பாண்டியன்?’ என்ற கேள்வியை எழுப்பி கவனம் ஈர்க்க வைத்தது.

2000-ம் ஆண்டிலிருந்து ஒடிசாவின் முதல்வராக இருந்துவருபவர் பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக். ஒடிசா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலம், அந்த மாநில மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்று, கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஒடிசா மாநில முதல்வராக அவர் இருந்து வருகிறார்.

நவீன் பட்நாயக்குடன் வி.கே. பாண்டியன்

முதல்வரின் முடிவுகளைத் தீர்மானிப்பவர்

பிஜு பட்நாயக்குக்கு மக்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருவதற்கும், அவரால் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிரடியாக வியூகங்களை அமைத்து வெற்றி பெற முடிவதற்கும் பின்னணியில் வி.கார்த்திகேய பாண்டியன் இருந்து வருகிறார். மேலும், பாண்டியன்தான் நவீன்பட்நாயக்கின் அடுத்த அரசியல் வாரிசு என்றும் பரபரப்பாக பேசப்பட்டதுண்டு.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன்பட்டியில் பிறந்த வி.கார்த்திகேயன் பாண்டியன், மதுரை வேளாண் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். 2000 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஒடிசா மாநில கேடராகப் பணியில் சேர்ந்தார். ஒடிசா மாநிலத்தைப் பூர்வீகமாகக்கொண்ட சுஜாதா என்ற ஐஏஎஸ் அதிகாரியை அவர் திருமணம் செய்துகொண்டார்.

முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொந்த மாவட்டமான கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சியராக 2007 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு, அவர் ஆற்றிய பல்வேறு பணிகளுக்காக ‘ஹெலன் கெல்லர் விருது’ பெற்றார். எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கு ஆற்றிய பணிகளுக்காக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய விருதையும் பெற்றார். அந்த மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தை நாட்டிலேயே மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக இரு முறை பிரதமரின் கையால் விருதுகள் பெற்றார். இப்படி கஞ்சம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில்தான், முதல்வர் நவீன பட்நாயக்குடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.

இது குறித்து பேசும் அம்மாநில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “பாண்டியன் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் முக்கிய பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெறுகிறார் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நெருக்கடிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார். நவீன் பட்நாயக்கின் மூளையாக செயல்பட்டு, அவரை மக்களுக்கான தலைவராக பிரபலமாக்கும் சில வெற்றிகரமான திட்டங்கள் பாண்டியனின் சிந்தனையில் உருவானதுதான்” எனப் புகழாரம் சூட்டி இருந்தனர்.

பாஜக காட்டிய காட்டம்

இந்த நிலையில்தான் ஒடிசாவில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற இருப்பதால், பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க கடந்த மார்ச் மாதம் பாஜக முயற்சி மேற்கொண்டது. ஆனால், அது தோல்வியில் முடிவடைந்த நிலையில், அப்போது பேசிய பாஜக தலைவர்கள், ஒடிசாவின் அடையாளமும் பெருமையும் கட்டிக்காக்கப்படுவது அவசியம் என்றும், ஆனால் முதல்வர் நவீன் பட்நாயக்கு நெருக்கமான தமிழரான பாண்டியன் ‘வெளியாள்’ என்றும், அவரை ஒடிசா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறி இருந்தனர்.

இன்னொருபுறம், கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி ஒடிசாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “ஒடிசாவின் அடையாளமும் மொழியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது” என பாண்டியனை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார்.

பாண்டியன் சொல்லும் பதில் என்ன?

இந்த நிலையில், தன் மீதான விமர்சனத்துக்குப் பதில் கூறியுள்ள பாண்டியன், “நவீன் பட்நாயக்கை என்னுடைய குருவாக கருதுகிறேன். நான் அவருடைய சிஷ்யன். நான் நவீன் பட்நாயக்கின் தீவிர விசிறி. நவீன் பட்நாயக் ஒடிசா மக்களுக்காக ஏராளமான கனவுகளை வைத்துள்ளார். மக்களுக்கு அவர் சிறந்த முறையில் பணியாற்றுவதற்காக இந்த பூமியில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை பூர்த்தி செய்ய அவருக்கு துணைபுரிவேன்” என்கிறார்.

‘தன்னை வெளியாள்’ என்று பாஜக கூறியதைப் பற்றி குறிப்பிடுகையில்,“அவர்கள் அரசியலுக்காக இவ்வாறு கூறுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக நான் ஒடிசாவில் இருந்து வருகிறேன். இங்குள்ள மக்கள், அவர்களில் ஒருவராக என்னை பார்க்கின்றனர். அதனால்தான் நான் கலந்து கொள்ளும் பேரணிகளில் என்னுடைய பேச்சை கேட்க ஏராளமானோர் திரண்டு வருகின்றனர்”எனக் கூறுகிறார்.

மேலும், “நான் நவீன் பட்நாயக்கின் இயற்கையான வாரிசா என்று கேட்கப்படுகிறது. நவீன் பட்நாயக்கின் சிறந்த பண்புகளை கொண்டவர்கள் தான் அவருடைய இயற்கையான வாரிசாக முடியும். நவீன் பட்நாயக்கின் நேர்மை,மக்கள் பணி செய்வதற்கான உறுதி,கடின உழைப்பு, நேரம் தவறாமை உள்ளிட்ட பல்வேறு பண்புகள் என்னிடம் இருக்கிறது. அந்த வகையில் அவருடைய இயற்கையான வாரிசு நான்தான்” என ஒரே போடாக போடுகிறார் பாண்டியன்.

Exit mobile version