தமிழ்நாட்டில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், கடுமையான வெயில் தாக்கத்தாலும் குளுமையான சுற்றுலா தலங்களைத் தேடி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டின் முக்கிய கோடை வாசஸ்தலமான ஊட்டி, குன்னூர், கொடைக்கானல், கோத்தகரி, ஏற்காடு, ஏலகிரி, வால்பாறை, மசினகுடி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது.
ஊட்டி, கொடைக்கானலில் குவியும் கூட்டம்
இருப்பினும் இதில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவது ஊட்டி மற்றும் கொடைக்கானல்தான். மலை வாசஸ்தலம் என்பதால், கொளுத்துகிற வெயிலுக்கு குளுமையாக இருக்கும் எனக் கருதி இங்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால், வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகிறது.
தற்போது ஊட்டிக்கு தினமும் சீசன் நேரங்களில் கார், வேன் உட்பட மொத்தம் 20,011 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2,002 வாகனங்களும் வருகின்றன. இதேபோல, கொடைக்கானலில் சீசன் நேரங்களில் 5,135 வாகனங்களும், சீசன் இல்லாத நேரங்களில் 2,100 வாகனங்களும் வருகின்றன.
சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதிப்பு
இதனால், மிகுந்த போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுவதால் உள்ளூர்வாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. அதுமட்டுமல்லாது, வாகனங்களிலிருந்து கிளம்பும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாவது மட்டுமல்லாது, அங்கிருக்கும் விலங்குகளும் பாதிப்புக்குள்ளாவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராகினர்.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையில், ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இரு இடங்களுக்கும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த மேற்கூறிய தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
அரசின் அறிக்கை சொல்வது என்ன?
மேலும், “ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஊட்டியில் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள தங்கும் இடங்களில் 20,000 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 5,620 அறைகளும், அதற்கு தேவையான வாகன நிறுத்தங்களும் உள்ளன. இவை தவிர, 12 இடங்களில் நிரந்தர வாகன நிறுத்தும் இடங்களும் உள்ளன.
கொடைக்கானலில் 13,700 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 3,325 அறைகள் உள்ளன. கொடைக்கானலில் வாகன நிறுத்தும் இடங்கள்தான் முக்கிய பிரச்னையாக உள்ளன. லேக்ஏரியா பகுதியில் ஒரு நிரந்தர வாகன நிறுத்தமும், அப்சர்வேட்டரி மற்றும் வட்டக்கானல் பகுதிகளில் 4 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றம் பிறப்பித்த இ-பாஸ் உத்தரவு
இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், “ஊட்டி, கொடைக்கானலுக்கு இவ்வளவு வாகனங்கள் சென்றால் உள்ளூர் மக்களின் நிலைமை என்ன ஆவது? இதனால், சுற்றுச்சூழல் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். தவிர, ஐஐடி, ஐஐஎம் சார்பில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
எனவே, கொரோனா காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது போல கோடைகாலத்திலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு வரும் மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும். அதே சமயம் உள்ளுர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்” என உத்தரவிட்டனர்.
ஊட்டியிலும் வெப்பம்
இதனிடையே தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு, தமிழகத்தில் கடலோரம் அல்லாத வடக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 14 மாவட்டங்களுக்கு நாளை மே 1 ஆம் தேதி வெப்ப அலைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டு உள்ள நிலையில், ஊட்டியிலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி வரலாற்றில் முதன்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று பதிவாகியிருக்கிறது. 1951 ஆம் ஆண்டிலிருந்து ஊட்டியில் பதிவான வெப்பநிலையில் இதுவே அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.