திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்தது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்களால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2011ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை 2016 ஆம் ஆண்டு விடுவித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுப்பு
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையையும், குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பையும் நிறுத்தி வைத்தது. இதனையடுத்து அவரது எம்.எல்.ஏ பதவி தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்குமாறு தமிழக ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அதனை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார்.
ஆளுநரை விளாசிய உச்ச நீதிமன்றம்
இதனையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநருக்கு எதிராக மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியிடம், “உங்கள் கவர்னர் என்ன செய்கிறார்? தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்ய மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார்.
உங்கள் ஆளுநரிடம் சொல்லுங்கள், நாங்கள் இதை தீவிரமாகப் பார்க்கப் போகிறோம். தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல. அவருக்கு அந்த அதிகாரத்தை அளித்தது யார்? உச்ச நீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம்.
‘நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்…’
ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அந்த நபர்/ அமைச்சர் குறித்து எனக்கு மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனப்படியே நாம் செயல்பட வேண்டும். ஆளுநர் மாநிலத்தின் சம்பிரதாய தலைவர் மட்டுமே” என மிக காட்டமாக கூறினார்.
இதனையடுத்து அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, இதற்கு பதிலளிக்க நாளை வரை அவகாசம் கோரினார். அதனைக் கேட்ட தலைமை நீதிபதி,
“இந்த விவகாரத்தில் நாளைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இல்லை என்றால், நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம். ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். அது என்ன என்பதை இப்போதைக்கு சொல்ல விரும்பவில்லை” என எச்சரித்தார்.
தொடர்ந்து குட்டு வாங்கும் ஆளுநர் ரவி
தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவிக்கு அவ்வப்போது உச்ச நீதிமன்றம் குட்டு வைக்கின்ற போதிலும், அவரது போக்கில் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவரை ஆட்டுவிப்பது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக-தான் என்பதால், அவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மீண்டும் பதவிப்பிரமாணம் தேவையில்லை?
தற்போது மீண்டும் உச்ச நீதிமன்றம் குட்டு வைத்திருக்கும் நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிரான காட்டமான விமர்சனங்களால் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரம் அதிர்ந்து போய் உள்ளது. ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் எதுவும் கருத்து தெரிவித்தால், அது மத்திய அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தில் இன்று இரவுக்குள் முடிவெடுக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இன்றைய விவாதத்தின்போது, பொன்முடிக்கான தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதால், அவருக்கு மீண்டும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டியது அவசியமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அவர் பழைய நிலையிலேயே ( Status quo) தொடர்வதால், புதிதாக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார்.
இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டபடி பொன்முடியை அமைச்சராக நியமிக்கும் அறிவிக்கை, ஆளுநர் மாளிகையிலிருந்து எந்த நேரத்திலும் வெளியாகலாம் எனத் தெரிகிறது.