காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம், கெஜ்ரிவால் கைது விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஜெர்மனியைத் தொடர்ந்து தற்போது ஐ.நா சபையும் விமர்சனம் செய்துள்ளது மத்திய அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21 ஆம் தேதியன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நடந்துள்ள இந்த கைது, எதிர்க்கட்சிகளை முடக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை எனப் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அவருக்கு முன்னதாக ஜார்க்கண்ட முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்த நிலையில், அவர் பதவி விலகினார்.
இந்த நிலையில், 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாகத் தாக்கல் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டன. இதனால், “எங்களால் இன்று 2 ரூபாய்கூடச் செலவு செய்ய முடியவில்லை. எங்களது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருக்கிறது பா.ஜ.க அரசு. ஊடகங்களில் விளம்பரம் கொடுக்க, பிரசாரம் செய்ய, தலைவர்கள் பயணிக்க என எதற்குமே செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொந்தளிப்புடன் கூறி இருந்தார்.
விமர்சித்த அமெரிக்கா, ஜெர்மனி
இந்த நிலையில்தான், இந்த இரு விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு வெளியே இருந்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் வெளிப்பட்டன. “நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே கெஜ்ரிவாலும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்குத் தகுதியானவர்” என்று ஜெர்மனி வெளியுறவுத்துறை கூறியிருந்தது.
அதேபோல, “அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது. சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்” என அமெரிக்கா கூறியிருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் இரு நாடுகளின் தூதர்களை நேரில் வரவழைத்து வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், அமெரிக்கா அதை பொருட்படுத்தாமல், அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து கருத்து வெளியிட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஒவ்வொரு பிரச்னைக்கும் நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான சட்ட நடைமுறைகளை அமெரிக்கா ஊக்குவிக்கும் எனக் கூறி இருந்தார்.
ஐ.நா-வும் எதிர்ப்பு
இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா. சபையும் இந்த விவகாரத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜா தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறும் ஒரு நாட்டில் மக்களின் ‘ அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்’ பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஜெர்மனி, அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா. சபையும் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றால், மத்தியில் ஆளும் பாஜக அரசோ அதிர்ச்சி அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ரூ. 1,700 கோடி செலுத்த நோட்டீஸ்
ஆனாலும், தனது அணுகுமுறையில் அது எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளப்போவதில்லை என்பதை உறுதிபடுத்தும் விதமாக, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் அடுத்ததாக ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2017-18 முதல் 2020-2021 வரையிலான நிதியாண்டுகளுக்கான அபராதம் மற்றும் வட்டி உட்பட கிட்டத்தட்ட 1,700 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.