Amazing Tamilnadu – Tamil News Updates

அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித் துறையின் இலக்கு எட்டப்படுமா?

மிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ், தமிழகம் முழுவதும் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு பிரசாரங்கள்

அரசுப் பள்ளிகளில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்த விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகளைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து, 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை மையமாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் பிரமுகர்களை பங்கு பெறச்செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

இதன் பலனாக, அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில், வரும் 2024 – 25 ஆம் கல்வியாண்டில் இதை மேலும் அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக, வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்னதாகவே சேர்க்கைப் பணிகள், கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுவிட்டன. அத்துடன், அரசுப் பள்ளி நலத்திட்டங்கள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு விளம்பர பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

3 லட்சத்தைக் கடந்த மாணவர் சேர்க்கை

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5.5 லட்சம் மாணவ-மாணவிகளை சேர்க்க பள்ளிக்கல்வித் துறை உத்தேசித்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் 5 வயது உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், வருகிற 12 ஆம் தேதிக்கு முன்னதாக, சுமார் 4 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்து பணிபுரிய வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று மாலை நிலவரப்படி 3,00,167 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 92.29% மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 லட்சம் இலக்கு எட்டப்படுமா?

வரும் கல்வியாண்டில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு வசதிகள் அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்ன மாதிரியான நலத் திட்டங்கள் கிடைக்கும், அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் திட்டங்கள், அவர்களின் திறனை வளர்க்க உள்ள விஷயங்கள் உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகிற 30 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் இலக்கான 5 லட்சம் மாணவர் சேர்க்கை எட்டப்பட்டுவிடும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version