Amazing Tamilnadu – Tamil News Updates

அரசுப் பள்ளிகளின் 28,000 தேவைகள் நிறைவேற்றம்!

ரசுப் பள்ளிகள் நிர்வாகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், உள்ளூர் மக்கள் அந்தப் பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் போது தான், அந்த பள்ளிகள் இன்னும் மேம்படும்.

கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி, ‘அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து பரிந்துரைக்கவும் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் அதன் செயல்பாடு மந்தகதியில் இருந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய 20 உறுப்பினர்கள் கொண்டகுழுவாக கடந்த ஆண்டு இது மாற்றி அமைக்கப்பட்டது. இந்த குழு மாதந்தோறும் கூடி விவாதித்து, பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகளும் கடமைகளும்

பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டதன் முக்கிய பணியே, 6 முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து, வயதிற்கு ஏற்ற வகுப்புகளில் சேர்த்து, தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்வது தான். மேலும், பள்ளியின் தரம், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்த்து, அறிந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பும் பங்களிப்பும் இந்த குழுவிற்கு உண்டு.

‘பள்ளி நிர்வாகம் என்பது தலைமையாசிரியருக்கு மட்டும்தான்’ என்கிற நிலை இல்லாமல், பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் பங்களிப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதத்திலேயே, இந்த பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. மேலும், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகை வன்முறைகளிலிருந்தும் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையிலும் இது செயல்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள், குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் கல்வியைத் தொடரும் வகையிலான வசதிகளை பள்ளியில் செய்து தருதல், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, சீருடை, பாட நூல் உள்ளிட்ட திட்டங்கள் முழுமையாகவும் சரியாகவும் மாணவர்களுக்கு கிடைப்பதை கண்காணித்து, உறுதிப்படுத்துதல் போன்றவற்றையும் பள்ளி மேலாண்மைக் குழு மேற்கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட 28 ,000 வசதிகள்

2021 ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இந்த பணிகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டது. இதன் பயனாக , கடந்த 14 மாதங்களில் 33,550 பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள், 3 லட்சத்து 61 தேவைகள் இருப்பதாக செயலி வாயிலாக பதிவு செய்துள்ளன. இந்த தேவைகளில், சுமார் 28,000 தேவைகள் வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக, 5,564 அரசுப் பள்ளிகளில் நீர், சுகாதாரம், மதிய உணவு வசதிகள், வளாக கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலுக்கான தளவாட பொருட்கள், பணியாளர்கள், உதவித் தொகை, நலத்திட்டங்கள் என சுமார் 3,000 தேவைகள் உடனே சரி செய்யப்பட வேண்டியதாக உள்ளன. அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. உடனடி தேவைகளை நிறைவேற்றிய பிறகு, அடுத்தகட்டமாக 50,000 கோரிக்கைகளை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தன்னிறைவு பெற்றவையாக மாற வேண்டும் என்ற நோக்கத்திலும், அவற்றின் தேவைகள் முழு வீச்சில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும் அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களின் பரிந்துரைகளை தமிழக அரசு முழு வீச்சில் செயல்படுத்தி வருவது, கல்வித் துறை மீதும் அதன் வளர்ச்சி மீதும் அது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றே சொல்லலாம்!

Exit mobile version