முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, கடந்த 2013 ஆம் ஆண்டு அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. 2013 – 16 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் சென்னை மாநகராட்சி சார்பில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. ஆனாலும், அம்மா உணவகங்களின் செயல்பாட்டில் அரசு தலையிடவில்லை. அந்த உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
பசியாறும் ஏழை எளிய மக்கள்
இங்கு இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், கலவை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கலவை சாதம் போன்றவை ரூ.5, 2 சப்பாத்தி ரூ.3 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இது, ஏழை, எளிய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் கூலித்தொழிலாளர்கள் மட்டுமல்லாது, நிறுவனங்களில் சற்று குறைந்த ஊதியங்களில் பணியாற்றும் மேன்சன்களில் தங்கி இருக்கும் இளைஞர்கள் கூட அம்மா உணவகங்களில் சாப்பிடுவது உண்டு. இதனால் ஏற்படும் பண சேமிப்பைக் கொண்டு, அதனை தங்களது வாழ்க்கை முன்னேற்றுத்துக்கான இதர தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுப்பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்
இப்படி சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் பயன்படுத்தப்படும் அம்மா உணவகம் குறைந்த விலைக்கு உணவு வழங்குவதால், சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.140-கோடி செலவு ஏற்படுகிறது. இந்த நிலையில், பல அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டடங்கள் சரிவர பராமரிப்பு இன்றி காணப்படுவதாகவும், பல கட்டடங்களின் உள் பகுதியில் சமையல் ஆவி, எண்ணெய் படிந்து சுவர்கள் அசுத்தமாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், பல இடங்களில் வெளிச்சமின்றி, போதிய மின் விளக்குகள் இல்லாமலும் உள்ளதாகவும், பொதுமக்கள் உண்பதற்கான மேசைகளின் கால்கள் உடைந்து காணப்படுவதாகவும், இதனால் சமீப காலமாக அங்கு உணவு உண்ண வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து அரசின் அறிவுறுத்தலின்பேரில், அம்மா உணவகங்களைப் புதுப்பொலிவுடன் மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அம்மா உணவகங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பழுதாகி கிடக்கும் குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்சி போன்றவற்றுக்குப் பதிலாக, புதியதாக வாங்கி கொடுக்கவும் திடடமிட்டுள்ளது.
ருசியான புதிய உணவு வகைகள்
சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில், மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அம்மா உணவகங்களின் கட்டடங்களை சீரமைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்ற வேண்டும். அம்மா உணவகங்களில் பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி மற்றும் சமையலறை பொருட்களை மாற்ற வேண்டும். அம்மா உணவகம் பற்றி புகார் வந்து, அவப்பெயர் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். அம்மா உணவகங்களின் பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்மா உணவகங்கள், வரும் நாட்களில் ருசியான புதிய உணவு வகைகளுடன் ஏழை மக்களின் பசியாற்ற தயாராகி வருகின்றன.