நிதி ஆயோக் கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய கோரிக்கைகள் என்ன?

டெல்லியில் சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 10 ஆவது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்நாட்டின் நிதி உரிமைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, மற்றும் மாநில வளர்ச்சிக்கு அவசியமான கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஸ்ரீசுமன் பெர்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நியாயமான நிதிப் பங்கு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு குறித்து கோரிக்கைகளை முன்வைத்தார்.
ஸ்டாலின் வலியுறுத்திய கோரிக்கைகள் இங்கே…
ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கு
“ஒன்றிய அரசின் வரி வருவாயில் 50 விழுக்காடு மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். தற்போது 15 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த 41 விழுக்காட்டிற்கு மாறாக, கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை பாதிக்கிறது. 50 விழுக்காடு பங்கு வழங்குவது மாநிலங்களுக்கு நிதி சுதந்திரத்தையும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உதவும்.”
நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்திற்கு நிதி
“தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அதிகரித்து வரும் நகர்ப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு, மற்றும் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. ‘அம்ருத் 2.0’ திட்டம் நிறைவடையும் நிலையில், உள்கட்டமைப்பு, இயக்கம், மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட புதிய நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்தை உருவாக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்.”
காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளுக்கு சுத்திகரிப்பு திட்டம்
“‘சுத்தமான கங்கை’ திட்டம் கங்கை நதியை மேம்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. ஆறுகள் நமது நாட்டின் உயிர்நாடியாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய முக்கிய ஆறுகளை சுத்தப்படுத்தவும், மீட்டெடுக்கவும் இதேபோன்ற திட்டம் தேவை. இந்தத் திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டி, மாநிலங்கள் தங்கள் மொழிகளில் மொழிபெயர்க்க அனுமதிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு உடனடி நிதி ஆதரவு வழங்க வேண்டும்.”

சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு நிதி விடுவிப்பு
“ பி.எம். ஸ்ரீ’ திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு 2024-2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,200 கோடி நிதி மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல், இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.”
மாநில நிதியை போராடிப் பெறுவது கூட்டாட்சிக்கு உகந்ததல்ல
“2047-ஆம் ஆண்டுக்குள் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பாராட்டத்தக்கது. மாநிலங்கள் மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதால், இந்த இலக்கை அடைய கூட்டுறவு கூட்டாட்சி அவசியம். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைய, ஒன்றிய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநிலத்திற்கு உரிய நிதியைப் பெறுவதற்கு போராட்டங்கள், வாதங்கள், மற்றும் வழக்குகள் தேவைப்படுவது கூட்டாட்சி இந்தியாவுக்கு உகந்ததல்ல.”
மேற்கண்ட கோரிக்கைகளை முதலமைச்சர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு
கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். மேலும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மற்ற முதலமைச்சர்களான மம்தா பானர்ஜி மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகியோருடன் மாநில உரிமைகள் குறித்து விவாதித்தார்.