விரைவான அரசு சேவைகள்… தடைகளைத் தகர்க்கும் “மக்களுடன் முதல்வர்” திட்டம்!

ரசாங்கத்தை மக்களிடமிருந்து பிரிக்கும் அதிகார சுவர்களை அகற்றும் நோக்கத்துடனும், அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும் , ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கும், நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும், சான்றிதழ்கள் பெறுவதற்கும் மக்கள் பல நேரங்களில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்

போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததாலும், எந்தெந்த கோரிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, குறிப்பிட்ட அரசு சான்றிதழ்களைப் பெற என்னென்ன ஆவணங்களை உடன் இணைக்க வேண்டும் என்பது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் இத்தகைய சிரமங்களை மக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாலும், அதற்கும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. மேலும் வேலைக்குச் செல்வோர் என்றால் விடுப்பு எடுக்க வேண்டியது வரும். கிராமப்புறங்களில் என்றால் விவசாய வேலைகள் உள்ளிட்டவை பாதிக்கும்.

இந்த நிலையில் தான், பொதுமக்கள் மேற்கூறிய அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளை சிரமமின்றி எளிதாகவும் விரைவாகவும் பெறுவதற்கு ஏதுவாக ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை வருகிற 18 ஆம் தேதி அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கவுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதன்படி முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18 முதல் தொடக்கம்

“முதற்கட்டமாக வரும் டிச.18-ம் தேதி முதல் ஜன.6 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து ஜன.31 வரை “மக்களுடன் முதல்வர்” திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும்.

இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். தமிழக முதல்வர் கோயம்புத்தூரில் இத்திட்டத்தினை துவக்கி வைக்கும் அதே நேரத்தில், அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலும் இம்முகாம்களை தொடங்கி வைக்கவுள்ளனர். இம்முகாம்களில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்”என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற முன்னோடி திட்டங்கள்

முன்னதாக தாம் ஆட்சிப் பொறுபேற்றவுடன், தமது தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற துறையை உருவாக்கி, அனைத்து மனுக்களுக்கும் 100 நாட்களில் தீர்வு காணும் திட்டத்தைச் செயல்படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த திட்டத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைகளைத் திறம்பட கையாண்டு, அவற்றை நிறைவேற்றிட ஏதுவாக, “முதல்வரின் முகவரித் துறை” என்ற தனித்துறையை உருவாக்க ஆணையிட்டார். இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதோடு, தமிழக முதல்வர், நேரடியாக மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற முன்னெடுப்பின் கீழ், மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, கள ஆய்வுகள் மேற்கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் பொது மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இந்த முன்னெடுப்பின் நீட்சியாக தான் தற்போது ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். முதல்வரின் இந்த இந்த தீர்க்கமான நடவடிக்கையால், மக்கள் இனி எளிதாக அரசு நிர்வாகத்தை அணுகி, அதன் சேவைகளைப் பெற முடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. Meet, marry, murder to premiere on tubi tv grapevine. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.