முதல் நாளிலேயே இலக்கை எட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு!
சென்னையில் நேற்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளிலேயே ரூ.5.50 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி, மாநாட்டின் முதலீட்டு இலக்கு எட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தை வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாது அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் முன்னணி தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன.
இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாநாட்டின் முதல் நாளிலேயே நிர்ணயிக்கப்பட்ட 5.50 லட்சம் கோடி இலக்கை எட்டும் வகையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது தொடர்பாக முன்னணி நிறுவனங்களோடு 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.43 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளிலேயே, 5.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டியதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நிறைவேறி உள்ளது.
முதலீடு குவிவது ஏன்?
முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசுகையில், தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவது ஏன் என்பதற்கான காரணத்தை முதலமைச்சர் விளக்கி இருந்தார்.
“ஒரு மாநிலத்தில், தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மேல் நல்லெண்ணம் இருக்கவேண்டும்! அங்கு சட்டம் – ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவவேண்டும்! ஆட்சியாளர்கள் மேல் உயர்மதிப்பு இருக்கவேண்டும். அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும்.
2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்களெல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது! முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று முன்கூட்டியே கணித்து, இன்றைய தமிழ்நாடு அரசு செயல்படுகிறது” எனப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.