3 ஆண்டுக்கால ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாட்டின் முன்னேற்றம் என்ன? – முதலமைச்சர் ஸ்டாலின் விரிவான விளக்கம்!

னது தலைமையிலான 3 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் முன்னேற்றம் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ‘அவுட்லுக்’ ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குஜராத் மாடலில் இருந்து திராவிட மாடல் எப்படி வேறுபட்டது என்பது குறித்தும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்தும் அதில் விரிவாக விளக்கி உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்கள் இங்கே…

தமிழ்நாட்டின் முன்னேற்றம்

பல்வேறு புள்ளிவிவரங்கள், தரவரிசைப் பட்டியல்களின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டின் நிலை என்ன? இந்த மூன்றாண்டுகளில் கண்கூடாக உங்கள் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?

கல்வி, மருத்துவம், அடிப்படைக் கட்டமைப்பு, பொருளாதாரம் இந்த நான்கும்தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அளவிடுவதற்கான அம்சங்கள்.

பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றால் பள்ளிக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையும், உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போதைய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆண் மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டமும் நல்ல பலனைத் தரும் என்று உறுதியாகச் சொல்லலாம். உயர்கல்விக்கான கட்டமைப்பில் தமிழ்நாடு எந்தளவுக்குச் சிறந்து விளங்குகிறது என்பதை அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலே நிரூபிக்கும். இந்தியாவின் முதல் நூறு உயர்கல்வி நிறுவனங்களில் அதிக இடங்களைத் தமிழ்நாடு பெற்றுள்ளது.

மருத்துவக் கட்டமைப்பில் ‘இந்தியாவின் மருத்துவத் தலைநகர்’ என்ற பெருமையைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. மக்களுக்கான மருத்துவச் சேவையில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மனித உயிர்களின் மகத்துவத்தை உணர்த்தக்கூடியனவாக உள்ளன.

தொழில் வளர்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் பல கட்டங்கள் முன்னேறி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் என்ற நிலைக்குத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 2023 நிதியாண்டில் முதலிடத்துக்குத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு எங்கள் ஆட்சிக்காலத்தில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

புதிய முதலீடுகள், புதிய தொழிலகங்கள், வேலைவாய்ப்புகள் என பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியாவில் மொத்தமாகப் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் 40 விழுக்காடாக உள்ளது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நோக்கிய பொருளாதார வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான சமச்சீரான வளர்ச்சியாகவும், பாலினச் சமத்துவம் கொண்ட வளர்ச்சியாகவும் கட்டமைத்து வருகிறோம்.

குனிந்து தேட வேண்டிய அளவில் இருந்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை மூன்றாண்டுகளில் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அளவுக்கு உயர்த்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

குஜராத் மாடலில் இருந்து திராவிட மாடல் எப்படி வேறுபட்டது என விளக்க முடியுமா? இந்த மாடல் உங்கள் வளர்ச்சிப் பாதையில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகிறது?

திராவிட மாடல் என்பது வேறெந்த மாடலுடன் ஒப்பிட இயலாத தனித்துவமான முன்மாதிரியாகும். இதன் தொடக்கம் என்பது நூறாண்டுகளுக்கு முன்பே நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் அடித்தளமிடப்பட்டது. வகுப்புவாரி இடஒதுக்கீடு, அனைத்துச் சமுதாயத்தினருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களுக்கான வாக்குரிமை என சமூகநீதி வாயிலான சமத்துவ வளர்ச்சியை முன்னிறுத்தியது. 1967 முதல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் இந்த சமச்சீரான சமூகநீதி அடிப்படையிலான வளர்ச்சியையே பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் முன்னெடுத்தனர்.

அதைத்தான் திராவிட மாடல் என்ற பெயருடன் தற்போது தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ, ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கோ மட்டுமே வாய்ப்புகள் என்றில்லாமல் கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள், வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு ஆகியவற்றைப் பரவலான அளவில் செயல்படுத்தி, ஏற்றத்தாழ்வு என்கிற இடைவெளியைக் குறைக்கின்ற வகையில் திட்டங்களைச் செயல்படுத்கின்ற மாடல்தான் திராவிட மாடல்.

மாநகரத்தில் உள்ளவர்களுக்கு கிடைப்பதுபோலவே கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கும் அவரவர் ஊர்களுக்குப் பக்கத்திலேயே உயர்கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, தலைநகரத்திற்கு வந்து செல்லக்கூடிய கட்டமைப்புகள் அனைத்தும் கொண்டது திராவிட மாடல். ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதுதான் திராவிட மாடலுக்கு எளிமையான விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

மு.க.ஸ்டாலினைக் கட்சியின் தலைவர் பொறுப்பில் அமர வைத்த தொண்டர்களின் உழைப்பும், மக்களின் நம்பிக்கையும்தான் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற பொறுப்பை வழங்கியிருக்கிறது. வெற்றிச் சான்றிதழைப் பெற்றபிறகு, கலைஞரின் நினைவிடத்தில் நான், “வாக்களித்தோர் மனநிறைவு கொள்ளும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கக்கூடிய வகையிலும் அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும்” என்று உறுதியளித்தேன்.

அதனை முழுமையாக நிறைவேற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலினாகிய நான், கட்சித் தொண்டர்கள் எதிர்பார்ப்பதுபோல, தி.மு.க ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் வகையிலான கட்சித் தலைவர் ஸ்டாலினாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அந்த பேட்டியில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Platform is evident in this move, empowering developers to select the ai models that best suit their specific needs. Alex rodriguez, jennifer lopez confirm split. Lucky you gulet – simay yacht charters – private yacht charter turkey & greece.