“நீ நதி போல ஓடிக்கொண்டிரு…” – மாணவர்களை அசத்திய முதலமைச்சரின் பேச்சு!
தமிழகத்தைப் பொறுத்தவரை தொடக்க கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ஏற்கெனவே இலவச நோட்டுப் புத்தகங்கள், மதிய உணவு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கல்வித் துறைக்கு மேலும் அதிக முக்கியத்துவம் நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பள்ளிப்படிப்பில் மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிக்கல்வித் துறையின் ஐம்பெரும் விழா
இதன் காரணமாக தான், இந்திய அளவில் தமிழகம் கல்வித் துறையில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், அரசுப் பள்ளிகளுக்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வகுப்பறையை குழந்தைகள் மனதிற்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மேலும், பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். அத்துடன் ரூ.101.48 கோடி மதிப்பீட்டில் 79,723 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ‘கையடக்கக் கணினிகள்’ வழங்கியதோடு, 1728 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியும் வாழ்த்தினார்.
“மாணவர்களே… படித்துக்கொண்டே இருங்கள்”
அதனைத் தொடர்ந்து விழாவில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இது எல்லாமே உங்களுக்காகத்தான். என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு. அதற்காகதான் இந்தத் துறையில் நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறோம். நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும், கல்வித்துறையில் நிறைய புதுப்புதுத் திட்டங்களை தொடங்குகிறோம் என்றால், உங்களுக்காகத்தான்.
மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்… படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கண்முன்னால் “ஃபுல் ஸ்டாப்” தெரியக் கூடாது. ‘கமா’ தான் தெரியவேண்டும். கீப் ரன்னிங். கீப் வின்னிங். கீப் ஷைனிங். Make Tamil Nadu proud!
கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. மாணவச் செல்வங்களான நீங்கள் படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்கக் கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை!
“கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாயட்டும்…”
கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்! அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். “படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்” என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும். நீங்கள் எல்லோரும் உலகை வெல்லும் ஆற்றலைப் பெற்று, பகுத்தறிவோடு செயல்பட தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் வாழ்த்துகிறேன்!
உங்கள் கனவுகள் மெய்ப்படட்டும்! All the best!” எனக் கூறினார்.
முதலமைச்சரின் இந்த பேச்சு விழாவுக்கு வந்திருந்த மாணவர்களை மிகவும் ஈர்த்ததோடு, அவர்களை மேலும் சாதிக்கத் தூண்டும் வகையிலான உத்வேகத்தையும் அளித்தது என்றே சொல்ல வேண்டும்!